சுடச்சுட

  

  யானைகள் இல்லாமல் காடுகள் இல்லை, நதிகள் இல்லை: கோவை சதாசிவம்

  By தருமபுரி,  |   Published on : 21st November 2016 08:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  யானைகள் இல்லாமல் காடுகள் இல்லை, காடுகள் இல்லாவிட்டால் நதிகள் இல்லவே இல்லை என்றார் சூழலியல் எழுத்தாளர் கோவை சதாசிவம்.
   தருமபுரியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்- கலைஞர்கள் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலக்கியக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் "சூழலியல் இலக்கியம்' என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது:
   நீர் மேலாண்மை பற்றி தமிழ்ச் சமூகத்துக்குத்தான் கூடுதல் அறிவு. வான் சிறப்பு பற்றி 10 குறள்களை எழுதியிருக்கிறார் திருவள்ளுவர். ஆனால், சென்னையில் நீர்நிலையை அழித்துத் தான் அவருக்கும் கோட்டம் கட்டியிருக்கிறோம்.
   உலகின் தண்ணீர் வளம் அப்படியே இருக்கிறது. கூடவும் இல்லை, குறையவும் இல்லை. ஆனால், தண்ணீருக்கான தேவை அதிகரித்திருக்கிறது. தண்ணீர் மாசு அதிகரித்திருக்கிறது.
   வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முட்டை முதல் ஜவுளிகள், கார் உள்பட அத்தனைக்கும் நம் நாட்டின் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் நாள்தோறும் வீணடிக்கப்படுகிறது. வளரும் நாடுகளின் நீர் வளத்தை வளர்ந்த நாடுகள் எப்படிக் களவாடுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
   வான் பொய்த்தாலும் தான் பொய்யாக் காவிரி என்றார்களே, இன்றைய காவிரியின் நிலை என்ன? அடுத்த 10 ஆண்டுகளுக்கு தண்ணீரைச் சேமித்து வைத்துக் கொள்ளும் மணலை போட்டி போட்டிக் கொண்டு கொள்ளையடித்து விட்டோம்.
   மனித- யானை மோதல் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் மனிதர்களைக் கொல்லும் யானைகள் தேவையா என்ற கேள்வியும் எழுகிறது. 5 கிராம் எடை கொண்ட பட்டாம்பூச்சிக்கும், 5 டன் கிலோ எடை கொண்ட யானைக்கும் தொடர்பு இருப்பதை உணர்ந்தோமா?
   பாலூட்டி வகையைச் சேர்ந்த அத்தனை விலங்குகளுக்கும் பேறுக்காலத்தில் தேவையான உப்புச் சத்து மலைப் பகுதிகளில் கிடைக்கிறது. அவற்றை முதலில் கண்டறிந்து உடைத்து எடுத்து யானைகள் சாப்பிடும். அவற்றைத் தொடர்ந்து அத்தனைப் பாலூட்டி விலங்குகளும் சாப்பிடும்.
   அதேபோல, விடியவிடிய நடுக்கும் கடுங்குளிரில் யானைகள் போடும் சாணத்தில் அமர்ந்து கொள்ள நூற்றுக்கணக்கான பட்டாம்பூச்சிகள் காத்திருக்கும். அது வெறும் யானைச் சாணத்தின் சூட்டுக்காக மட்டுமல்ல, அதிலிருந்து கிடைக்கும் ஒருவகையான உப்புச்சத்தைக் கிரகித்துக் கொள்ள என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
   யானைகள் தினமும் குளிக்கும் பழக்கமுடையவை. குளிப்பதற்காக யானைகள் காட்டாறுகளுக்கு வரும் என குளவிகள் காத்திருக்கும். தண்ணீர் இருபுறமும் வழியும்போது, கரைகளில் கெட்டியான மண் ஈரமாகும்.
   குளவிகள் அதிலே ஓட்டையிட்டு, வெட்டுக்கிளிகளைப் பிடித்து வந்து உள்ளே வைத்துவிட்டு முட்டையிடும். முட்டைகள் குளவிகளாகும்போதும் வெட்டுக்கிளிகள் உணவாகும். பட்டாம்பூச்சிகளும், குளவிகளும்தான் இயல்பான மகரந்தச் சேர்க்கைக்குக் காரணிகள். இது நீண்ட சங்கிலித் தொடர்.
   விதவிதமான செடிகள், மரங்களின் விதைகளை யானைகள் உண்டு, பதப்படுத்தி சாணத்துடன் வெளியேற்றுகின்றன. லேசான மழை பெய்தாலும்கூட அவை அத்தனையும் முளைத்துவிடும்.
   இவ்வாறு 36 வகையான செடிகள் முளைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதுதான் இயற்கை தந்திருக்கும் வரம்.
   யானைகள் குறைந்தால், பட்டாம் பூச்சிகள், குளவிகள் உள்பட விலங்கினங்களின் வாழ்வு பாதிக்கப்படும். அதைத் தொடர்ந்து காடுகள் பாதிக்கப்படும். காட்டின் வளம் பாதிக்கப்பட்டால், வேறு வழியே இல்லை, நாட்டில் ஓடுகிற அத்தனை நதிகளும் உயிரிழக்கும்.
   யானைகளின் வலசைப் பாதைகளை நாம் ஆக்கிரமித்து கட்டடங்களை எழுப்பிவிட்டு, யானைகள் வந்துவிட்டதெனப் பதறுகிறோம்.
   இயற்கையோடு இயைந்து வாழ வேண்டும் என்பது மீண்டும் குகைகளுக்குச் சென்று வாழச் சொல்வதல்ல. கடந்த ஒரு நூறாண்டாக நாம் செய்த சாத்தியமுள்ள பாதைக்குத் திரும்பச் சொல்வதே ஆகும். இயற்கையை மீறினால் கட்டாயம் அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும்.
   எனவே, மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ள சூழலியல் துறை இலக்கியங்கள்தான், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் ஆகச் சிறந்த இலக்கியங்களாக வரப் போகின்றன என்றார் சதாசிவம்.
   கூட்டத்தை, அறிவியல் இயக்க நிர்வாகி சுஷீல்குமார், எழுத்தாளர் சங்க நிர்வாகி நாகை பாலு ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai