சுடச்சுட

  

  கான்கிரீட் தடுப்புகளை சேதப்படுத்தும் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள்!  

  By தருமபுரி,  |   Published on : 22nd November 2016 01:08 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  s15

  கொடிக் கம்பங்களை வைப்பதற்காக நெடுஞ்சாலைகளில் உள்ள கான்கிரீட்டால் ஆன நடுத் தடுப்புக் கட்டையை (சென்டர் மீடியன்) உடைத்துச் சேதப்படுத்தும் அரசியல் கட்சியினரின் செயலுக்கு தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   சாலைகளில் வருவோர்- போவோரைத் தடுத்துப் பிரிக்க நடுவே 3 அடி உயரமுள்ள தடுப்புக் கட்டைகள் அனைத்துப் பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ளன.
   தனித்தனியே கான்கிரீட் அமைப்பில் தயாரிக்கப்பட்ட இந்தக் கட்டைகள் சாலையில் வைக்கப்பட்ட பிறகு சிமெண்ட் கலவை கொண்டு ஒட்டப்படுகின்றன. நடுவே மின் விளக்குக் கம்பங்கள் அமைப்பதற்காக மட்டும் ஆங்காங்கே சிறுபகுதி வெட்டி எடுக்கப்பட்டு அப்பகுதியில் மின் கம்பங்கள் அமைக்கப்படும்.
   இவ்வகையான கான்கிரீட் தடுப்புக் கட்டைகளால் சாலை விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் குறைவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
   இந்த நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது விழாக்களுக்கு விவிஐபிக்கள் வரும்போது சாலையின் நடுவே கொடிக் கம்பங்களை அமைக்கின்றனர்.
   தற்போது கான்கிரீட் தடுப்புகளுக்கேற்ப இரும்புக் குழாய்களில் "கப்லிங்க்' அமைத்து கொடிக் கம்பங்கள் பொருத்தப்படுகின்றன.
   இவற்றை பொருத்துவதற்கேற்ப இந்தத் தடுப்புகளின் நடுவே சிறிய அளவிலான துளைகளும் இயல்பாகவே உள்ளன.
   துளைகளில் எளிதாக "நட்டு' போட்டு முடுக்கிக் கொள்ளும் அரசியல் கட்சியினர், விழா முடிந்தவுடன் அகற்றிக் கொள்கின்றனர். இதற்கு முறைப்படி அனுமதி பெறுகிறார்களா? இல்லையா? என்பது ஒரு புறம் இருந்தாலும், தடுப்புகளை தங்களது தேவைக்கேற்ப உடைத்துக் கொள்ளும் செயலும் நடைபெறுவதுதான் சிக்கல்.
   இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியது:
   அரசியல் கட்சிகள் கொடிக் கம்பங்களை அமைப்பதற்கு ஒரு காலத்தில் அனுமதி வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது வழங்குவதில்லை. கான்கிரீட் தடுப்புகளுக்கு நடுவே உள்ள சிறு துளைகள், அந்த கான்கிரீட் அமைப்புகளை தூக்கி வருவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டன. அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு இவ்வாறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
   லேசான உடைப்புகள் ஏற்பட்டாலே காலப்போக்கில் இந்த கான்கிரீட் தடுப்புகள் முற்றிலும் சேதமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
   எனவே, சாலைகளின் நடுவே அரசியல் கட்சியினர் தங்களது கொடிகளைக் கட்டுவதற்கு முழுமையான தடை விதிப்பதுடன், அவ்வாறு அமைப்பவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai