சுடச்சுட

    

    கார்த்திகை தீபத்துக்கு தயாராகும் அகல் விளக்குகள்!

    By நமது நிருபர், தருமபுரி  |   Published on : 22nd November 2016 01:09 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    s16

    கார்த்திகை தீபத்துக்காக தருமபுரி அதியமான்கோட்டை பகுதியில் அகல் விளக்குகள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
     சிவபெருமானின் அடியையும் முடியையும் காண முற்பட்டு பிரம்மாவும், விஷ்ணுவும் தோற்றதை அடுத்து, சிவபெருமான் ஜோதி வடிவில் காட்சி தந்த நாளாக கார்த்திகை தீபம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
     இந்துக்களின் பண்டிகைகளில் முக்கியமானதாகக் கருதப்படும் கார்த்திகை தீபத் திருநாளில், வீடுகள் அகல் விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது. திருநாளுக்கு முன்பும், பின்பும் சில நாள்கள் இவ்வாறாக அகல் விளக்குகள் வைக்கப்படும்.
     நாகரீக வளர்ச்சியின் பெயரில், பீங்கான் அகல் விளக்குகளும், வண்ண வண்ண மெழுகு விளக்குகளும் வந்தாலும்கூட மண் விளக்குகளுக்கு தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது.
     இந்த ஆண்டு வரும் டிசம்பர் 12-ஆம் தேதி கார்த்திகைத் தீபத் திருநாள் வரவுள்ளது. இதற்காக கடந்த ஒரு மாதமாகவே தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை பகுதியில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
     அதியமான்கோட்டை பகுதியில் சுமார் 15-க்கும் மேற்பட்ட மண்பாண்டத் தொழிலாளர் குடும்பங்கள் வசிக்கின்றன.
     பொதுவாகவே மண்பாண்டம் செய்யும் சமூக மக்கள், பண்டிகைக் காலங்களில் அகல் விளக்குகள் செய்வார்கள். மற்ற நாள்களிலும் இவற்றைச் செய்து வைத்து பண்டிகைக் காலங்களில் விற்பனை செய்வோரும் உண்டு.
     விளக்கு தயாரிக்கும் அப்பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் கூறியது:
     ஆயிரம் விளக்குகள் ரூ. 500க்கு மொத்த விற்பனையில் கொடுக்கிறோம். ஒரே நாளில் ஆயிரம் விளக்குகளை செய்துவிட முடியும். சுமார் 40 ஆயிரம் விளக்குகள் செய்து காய வைத்த பிறகே, நெருப்பிலிட்டு சுடுவதற்கான சூளை தயார் செய்வோம்.
     தருமபுரி மாவட்டம் மட்டுமல்லாது கோவை போன்ற பெரு நகரங்களுக்கும், கேரளம், கர்நாடகம் போன்ற அண்டை மாநிலங்களுக்கும் மொத்த வியாபாரிகள் எங்களது அகல் விளக்குகளை வாங்கிச் சென்று விற்பனை செய்கிறார்கள். ஒரு குடும்பம் மாதத்துக்கு 50 ஆயிரம் அகல் விளக்குகளைச் செய்ய முடியும். இதைத் தவிர வேறு வேலை எங்களுக்குத் தெரியாது என்றார் அர்ஜுனன்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai