இ-சேவை மையங்களில் உயிர்ச் சான்றிதழ் பெறலாம்: மாவட்ட வருவாய் அலுவலர்
By தருமபுரி, | Published on : 24th November 2016 08:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அரசு பொது இ-சேவை மையங்களில் ஓய்வூதியதாரர்கள் உயிர்ச் சான்றிதழ் பெறலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டத்தில், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இயங்கி வரும் நிரந்தர ஆதார் சேர்க்கை மற்றும் அரசு பொது இ-சேவை மையத்துக்கு ஆதார் எடுக்கும் பணிகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர் தலைமையில் செய்தியாளர்கள் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
இதில், அரூர் வட்டம், நரிப்பள்ளி ஆர்.வி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அரசு பொது இ-சேவை மையத்தின் மூலமாக மேற்கொள்ளப்படும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
இதைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர் செய்தியாளர்களிடம் கூறியது:
அரசு பொதுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வூதியம் பெறுவோர் தங்களது ஓய்வூதியம் தொடர்ந்து பெற உயிர்ச் சான்றிதழ் அளிக்க வேண்டும்.
இந்த சான்றிதழுக்காக அவர்கள் இனி பல்வேறு அலுவலகங்களுக்கு அலையத் தேவையில்லை. அரசு இ-சேவை மையத்தில் டிஜிட்டல் சான்றிதழ் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இதற்காக ஓய்வூதியதாரர்கள் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு எண், ஓய்வூதியதாரர்கள் தொகை பெறுவதற்கு வழங்கப்பட்ட ஆணை, நிரந்த கணக்கு எண் ஆகிவற்றை அளித்து இந்த இ-சேவை மையங்களில் பதிவு செய்தால் போதும், அந்த மையத்தில் அவர்களுக்கு சான்றிதழ் அளிப்பதோடு, சம்பந்தப்பட்ட துறைக்கும் நேரடியாக அச் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும். இதற்கு ரூ.10 மட்டும் கட்டணமாகப் பெறப்படும்.
அதேபோல, ஆதார் அட்டையில் திருத்தங்கள் உரிய சான்றுகளுடன் மேற்கொள்ளலாம். வண்ண வாக்காளர் அடையாள அட்டை ரூ.25 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
அப்போது, தனி வட்டாட்சியர் லதா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.