Enable Javscript for better performance
பாரத மாதா ஆலயம் அறிவிப்புக்காக காத்திருக்கும் தியாகிகள்!- Dinamani

சுடச்சுட

  

  பாரத மாதா ஆலயம் அறிவிப்புக்காக காத்திருக்கும் தியாகிகள்!

  By நமது நிருபர், தருமபுரி  |   Published on : 24th November 2016 08:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாரத மாதா ஆலயம் கட்ட அறிவிப்பு வருமா என்ற எதிர்ப்பார்ப்பில் தருமபுரி மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள் காத்திருக்கின்றனர்.
   இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று பல்வேறு இன்னல்களை ஆங்கிலேய அரசால் அனுபவித்தவர் தியாகி சுப்பிரமணிய சிவா.
   திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் கடந்த 1884-ஆம் ஆண்டு பிறந்தவர் சுப்பிரமணிய சிவா. இவர், கடந்த 1906-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த ஸ்ரீநாகூர்கானின் எழுச்சிமிகு உரையைக் கேட்டு, தன்னை இந்திய விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டார்.
   1908-இல் கோரல்மில் தொழிலாளர்களுக்காக வ.உ.சி. நடத்திய போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அப்போராட்டத்தில் வெற்றி பெற்றார். இப் போராட்டத்தின் போது இவர் தொழிலாளர்கள் மத்தியில் ஆற்றிய உரை, ஆங்கிலேயரை அச்சம் கொள்ளச் செய்தது.
   இதையடுத்து, நெல்லைச் சதி வழக்கில் கைது செய்யப்பட்டு 4 ஆண்டு 4 மாதங்கள் சிறையில் இருந்தார். இவ் வழக்கிலிருந்து வெளிய வந்த அவர், தொடர்ந்து போராட்டங்களில் பங்கேற்றதால் மீண்டும், 1921, 1922-இல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
   இவர், அலிபுரம் சிறையில் இருந்தபோது, தருமபுரியைச் சேர்ந்த தியாகிகளின் நட்பு கிடைத்தது. இதன் மூலம், தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டிக்கு வந்தார்.
   தனது நண்பர்கள் உதவியுடன் பாப்பாரப்பட்டி சண்முக முதலியாரிடம் 6 ஏக்கர் 21 சென்ட் நிலத்தை வாங்கி, அந்த நிலத்துக்கு பாரதபுரம் என பெயர் வைத்தார். இங்கு தங்கி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அவர், அந்த இடத்தில் அனைத்து மதத்தினரும் பாகுபாடின்றி ஒற்றுமையுடன் இருக்க, பாரதமாதா ஆலயம் எழுப்பத் திட்டமிட்டார். இந்த ஆலயம், இந்தியத் திருநாட்டுக்கு உதாரணமாக இருக்க வேண்டும் எனவும் அவர் விருப்பினார்.
   இதற்காக, 1923 -ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம் தேதி சித்தரஞ்சன் தாûஸ அழைத்து வந்து, அடிக்கல் நாட்டினார். தனது லட்சியக் கனவை நிறைவேற்ற அவர் தன்னைப் பாதித்த தொழுநோயையும் பொருள்படுத்தாமல் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று நிதி திரட்டினார்.
   இந்த நிலையில், தியாகி சுப்பிரமணிய சிவா, பாப்பாரப்பட்டி பாரத ஆசிரமத்தில் இருந்தபோது கடந்த 1925 - ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி தனது 41-ஆவது வயதில் மறைந்தார். அவரது உடல் பாரதபுரத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
   அவரது மறைவுக்கு பின்னர், பாரதமாதா ஆலயக் கனவு நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.
   ஆனால், சிவாவின் கனவை நனவாக்க வேண்டும் என வலியுறுத்தி, காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரிஅனந்தன், நடைபயணம், அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டார். மேலும், இது தொடர்பாக அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
   இந்த வழக்கில், ஆலயம் கட்டுவது தேச ஒற்றுமையை வளர்க்கும் எனவும், இது தொடர்பாக, தமிழக அரசு பரிசீலித்து இரண்டு மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கடந்த 2015 ஜூன் 19-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
   இந்த உத்தரவைத் தொடர்ந்து குமரிஅனந்தனும், தருமபுரி மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள், வாரிசுகள் சமிதி தலைவர் எம்.ஆர்.சீனிவாசன் உள்ளிட்டோர் தருமபுரி மாவட்ட நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு, ஆலயம் எழுப்ப நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், ஆலயம் அறிவிப்பு வரும் என்ற எதிர்ப்பார்ப்போடு அவர்கள் காத்திருக்கின்றனர்.
   இதுகுறித்து, தருமபுரி மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சமிதி தலைவர் எம்.ஆர்.சீனிவாசன் கூறியது: பாரதமாதா ஆலயம் தொடர்பாக காந்தியப் பேரவைத் தலைவர் குமரிஅனந்தன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு பிறப்பித்து 17 மாதங்கள் கடந்த நிலையிலும், எக்காரணத்தினாலோ தாமதமாகிறது.
   சிவாவுக்கு வாரிசுகள் இல்லாத காரணத்தால் அவர் வாங்கிய நிலத்தையும் அரசு தன்வசப்படுத்திக் கொண்டது. சிவாவின் கனவை சுதந்திரப் போராட்ட வீரர்களான எங்களது காலத்திலாவது அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்றார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai