சுடச்சுட

  

  விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால், அரசுப் பேருந்து தருமபுரியில் புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
   கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே கல்லாவியை சேர்ந்தவர் துரைசாமி (60). இவர், கடந்த 2007-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதி மண்ணாடிப்பட்டியில் இருந்து கல்லாவிக்கு அரசு நகர்ப் பேருந்தில் சென்றார்.
   பேருந்து கல்லாவி அருகே சென்ற போது, அதில் பயணித்த துரைசாமி தவறி விழுந்தார். இந்த விபத்தில், அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
   இதையடுத்து, துரைசாமியின் இறப்பிற்கு இழப்பீடுக் கோரி, அவரது குடும்பத்தினர், தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இவ் வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிமன்றம் கடந்த 2011 ஏப்ரல் 25-இல் ரூ.2 லட்சத்து 66 ஆயிரத்தை இழப்பீடாக அரசுப் போக்குவரத்து கழகம் துரைசாமியின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இருப்பினும், அரசுப் போக்குவரத்துக் கழகம், இழப்பீடு வழங்குவதில் தாமதம் செய்ததையடுத்து, மீண்டும் அதே நீதிமன்றத்தில் கட்டளை நிறைவேற்ற மனு தாக்கல் செய்யப்பட்டது.
   இந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி வட்டியுடன் ரூ.4 லட்சத்து 58 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க வேண்டும், தவறினால், அரசுப் பேருந்தை ஜப்தி செய்யலாம் என நீதிபதி உத்தரவிட்டது.
   இந்த நிலையில், நீதிமன்ற ஊழியர்கள், இவ்வழக்கு தொடர்பாக, தருமபுரி பேருந்து நிலையத்தில் மேட்டூர் செல்ல தயாராக இருந்த அரசுப் பேருந்தை ஜப்தி செய்தனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai