சுடச்சுட

  

  காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு

  By தருமபுரி,  |   Published on : 26th November 2016 08:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கொலை வழக்கை முறையாக விசாரிக்காத, காவல் ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தருமபுரி நீதிமன்றம் காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.
   தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (25). புகைப்படக்காரரான இவர் அதே பகுதியில் ஸ்டுடியோ வைத்திருந்தார். இந்த நிலையில், அவர் கடந்த 2014 அக்டோபர் 2-ஆம் தேதி பலத்த காயங்களுடன் அப்பகுதியில் உள்ள சாலையோரத்தில் கிடந்தார்.
   இதையடுத்து, அவர் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜெகதீசன் மூன்று நாள்களுக்கு பிறகு உயிரிழந்தார்.
   இதுகுறித்து அப்போதைய பாப்பாரப்பட்டி காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் முதலில் விபத்து எனவும், இதனைத் தொடர்ந்து, கொலை வழக்காகவும் பதிவு செய்தார். மேலும், இது தொடர்பாக பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த தையலர் சிவராஜ் (25) மற்றும் அவரது நண்பர்கள் தினேஷ் (24), வேம்பரசன் (25) ஆகிய மூவரையும் கைது செய்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தருமபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
   இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான புகார் சரிவர நிருபிக்க முடியாததால், மூவரையும் நீதிமன்றம் விடுவித்தது. மேலும், இவ்வழக்கில் முதல் தகவல் அறிக்கை முறையாக பதிவு செய்யாதது, சட்டத்துக்குள்பட்டு புலன்விசாரணை நடத்தாதது, உயிரிழந்த நபர், காயமுற்று மூன்று நாள்கள் சிகிச்சையிலிருந்த போதும், அவரிடம் வாக்கு மூலம் பெறாதது ஆகிய காரணங்களுக்காக, வழக்கு விசாரணை அதிகாரியான, தற்போதைய பாலக்கோடு காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும், இது தொடர்பாக உத்தரவினை காவல்துறைக்கும், உள்துறைக்கும் அரசு வழக்குரைஞர் அசோக்குமார் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai