சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே குடிநீர் கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
     பாப்பாரப்பட்டி அருகே ஆச்சாரஅள்ளி ஊராட்சிக்குள்பட்டது எட்டியாம்பட்டி மாணிக்கம்கொட்டாய். இப் பகுதியில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
     இங்குள்ள ஆழ்துளைக்கிணறு மூலம் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டு, அதன் மூலம் இப்பகுதிக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
     இந்த நிலையில், தற்போது வறட்சி காரணமாக ஆழ்துளைக்கிணறு வற்றி விட்டதாக கூறப்படுகிறது. இதனால், கடந்த இரண்டு வாரங்களாக குடிநீர் முறையாக விநியோகிக்கப்படவில்லையாம். இதன் காரணமாக, இப் பகுதி மக்கள் நீரின்றி சிரமப்பட்டு வந்தனர். மேலும், இப்பகுதிக்கு ஒகேனக்கல் குடிநீரும் இதுவரை வழங்கப்படவில்லையாம்.
     இது தொடர்பாக, அண்மையில் ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, காலிக் குடங்களுடன் பாப்பாரப்பட்டி-சோமனஅள்ளி சாலையில் அமர்ந்து அப்பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அதிகாரிகள், குடிநீர் வழங்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன் பேரில், பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai