Enable Javscript for better performance
தருமபுரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல்

    By தருமபுரி,  |   Published on : 26th November 2016 08:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என அனைத்து விவசாயிகள் சங்கத்தினரும் வலியுறுத்தினர்.
     தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்கத் தலைவர்கள் எஸ்.சின்னசாமி, எஸ்.ஏ.சின்னசாமி, ஜெ.பிரதாபன் உள்ளிட்டோர் பேசியது: தருமபுரி மாவட்டம் வறட்சியால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான விவசாய விளைபொருள்கள் நிலத்திலேயே அழிந்துவிட்டன. வேளாண் துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைத்து முறையாக பாதிப்புகளை கணக்கெடுத்து அரசுக்குப் பரிந்துரைகளை அனுப்ப வேண்டும். முழுமையாக வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக தருமபுரியை அறிவித்து, ஏக்கர் அடிப்படையில் இழப்பீட்டை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் என்றனர்.
     இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசும்போது, அண்ணா பல்கலைக்கழகத்தினரின் உதவியுடன் ஆளில்லா விமானம் மூலம் விவசாய சாகுபடியைத் துல்லியமாகக் கணக்கிடும் தொழில்நுட்பம் வேளாண் அலுவலர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மாதம் ஒரு முறை அந்தந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் விவசாய சாகுபடி குறித்த விவரங்களைப் பதிவு செய்து வருகின்றனர் என்றார்.
     பால் உற்பத்தியாளர்களுக்கான தொகையை 3 வாரங்களுக்கு ஒரு முறை வங்கிக் கணக்கில் செலுத்தும் போது, அதே வங்கியில் பெற்றுள்ள கடன் நிலுவைக்காக அந்தப் பணம் பிடித்தம் செய்து கொள்வதால் கடுமையான பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
     இதற்கு பதிலளித்த ஆட்சியர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் மாவட்ட அளவில் பதிவு செய்துள்ள அத்தனை விவசாயிகளுக்கும் கூடுதலாக தனியே ஒரு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, பால் கணக்குப் பணம் அதன்வழியே பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
     நீர்நிலைகள் தூர்வாருவது குறித்து பலரும் கேள்வி எழுப்பியதற்கு, ஏரிகளிலுள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வனத் துறையினரிடம் மதிப்பீடு கோரப்பட்டுள்ளது, குறைந்தபட்சம் ஒரு ஒன்றியத்துக்கு 5 ஏரிகளில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படும். நீர்நிலைகளுக்கு தண்ணீர் வழங்கும் வரத்து வாய்க்கால்களை சீரமைக்கும் பணிக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இந்த வகையில் மாவட்டத்திலுள்ள 651 கி.மீ. தொலைவுள்ள இணைப்புக் கால்வாய்களில் இதுவரை 407 கி.மீ. தொலைவு சீரமைக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் பதிலளித்தார்.
     கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர், வேளாண் இணை இயக்குநர் ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஆர்.ஆர்.சுசீலா, சர்க்கரை ஆலை தனி அலுவலர்கள் துர்கா, கவிதா, வருவாய் கோட்டாட்சியர்கள் ராமமூர்த்தி, கவிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai