"சட்ட விரோதம் குறித்து மறைமுகமாகவும் தகவல் அளிக்கலாம்'
By DIN | Published on : 27th November 2016 03:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சட்ட விரோதமான செயல்கள் குறித்த தகவலை நீதிமன்றத்துக்கு பொதுமக்கள் மறைமுகமாகவும் தெரியப்படுத்தலாம் என மாவட்ட உரிமையியல் நீதிபதி கே.ஆர்.கண்ணன் தெரிவித்தார்.
இந்திய சட்ட நாள் தினத்தை முன்னிட்டு, பாப்பிரெட்டிப்பட்டி வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் எருமியாம்பட்டி இ.ஆர்.கே மகளிர் கல்லூரியில் இலவச சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதி கே.ஆர்.கண்ணன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமில் மாவட்ட உரிமையியல் நீதிபதி கே.ஆர்.கண்ணன் பேசியது:
சட்ட விரோதமாக நடைபெறும் சம்பவங்கள், குற்ற நிகழ்வுகள் குறித்த தகவலை பொதுமக்கள் காவல் துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும். சட்ட விரோத நிகழ்வுகளைத் தெரிவித்தால் மட்டுமே குற்றங்களைக் குறைக்க முடியும்.
தகவல் தெரிவிப்பவர்கள் நேரடியாக பெயர் முகவரிகளைத் தெரிவித்தால் சமூக விரோத கும்பலிடமிருந்து அச்சுறுத்தல் வரும் என்று நினைத்தால், அருகில் உள்ள நீதிமன்றங்களுக்கு கடிதம் அல்லது மொட்டைக்கடிதம் வாயிலாக மறைமுகமாகவும் தெரியப்படுத்தலாம். பெயர் முகவரி இல்லாமல் நீதிமன்றத்துக்கு தகவல் வந்தால்கூட அதனை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு பரிந்துரை கடிதங்கள் அனுப்ப வழிவகை உண்டு.
எனவே, சமுதாயத்தில் நடைபெறும் குற்ற நிகழ்வுகளைப் பார்த்துவிட்டு ஒதுங்கிச் செல்லும் பண்பாடு கல்லூரி மாணவர்களுக்கு இருக்கக் கூடாது. சட்டத்தின் முன் ஏழை, பணக்காரர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இல்லை.
பொருளாதார ரீதியாக ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை நடத்துவதில் இடையூறு இருக்கக் கூடாது என்பதற்காகவே ஒவ்வொரு நீதிமன்றத்திலும் இலவச சட்டப் பணிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் இடம் பெற்றுள்ள வழக்குரைஞர்கள் மனுதாரர்களுக்கு இலவசமாக சட்ட உதவிகளைச் செய்து தருவார்கள். ஆணுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் பெண்ணுக்கும் உண்டு.
எனவே, சமூதாயத்தில் பெண்களுக்குத் தேவையான கல்வி, சொத்து உரிமைகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை உரிமைகளையும் நாம் அளிக்க வேண்டும் என்றார்.
இந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் பாப்பிரெட்டிப்பட்டி குற்றவியல் நடுவர் கே.யுவராஜ், இ.ஆர்.கே. கல்வி நிறுவனங்களின் தாளாளர் இ.ஆர்.செல்வராஜ், நிர்வாக அலுவலர் சி.அருள்குமார், கல்லூரி முதல்வர் அ.பால்வண்ணன், துணை முதல்வர் த.சக்தி, சட்டப் பணிகள் குழு நிர்வாகிகள் எம்.மணி (ஓய்வு), ஜெ.முகமது உசேன், வழக்குரைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.