சுடச்சுட

  

  நெருப்பாண்டகுப்பத்தில் குடிநீர் தட்டுப்பாடு: மக்கள் அவதி

  By DIN  |   Published on : 27th November 2016 03:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரூரை அடுத்த நெருப்பாண்டகுப்பத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு காரணமாக கிராம மக்கள் அவதியுறுகின்றனர்.
  அரூர் ஊராட்சி ஒன்றியம், எச்.அக்ராஹரம் ஊராட்சிக்குள்பட்டது நெருப்பாண்டகுப்பம் கிராமம். இந்த ஊரில் 750-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்யும் வகையில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டடப்பட்டுள்ளது.
  இந்த நீர்த்தேக்கத் தொட்டிக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்திலிருந்து குழாய் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், நீர்த்தேக்கத் தொட்டிக்கு ஒகேனக்கல் குடிநீர் முறையாக ஏற்றப்படுவதில்லையாம்.
  இதனால் கடந்த 20 தினங்களாக நெருப்பாண்டகுப்பம் கிராமத்தில் போதிய அளவில் குடிநீர் கிடைக்கவில்லையாம். இதேபோல, ஆட்டியானூர் (தாதம்பட்டி), ஏ.வெளாம்பட்டி ஆகிய கிராமங்களிலும் நாள்தோறும் குடிநீர் விநியோகம் இல்லையாம்.
  எனவே, எச்.அக்ராஹரம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் நெருப்பாண்டகுப்பம், ஆட்டியானூர், ஏ.வெளாம்பட்டி ஆகிய கிராமங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர்த் தட்டுப்பாடுகளைப் போக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பு.

  தண்ணீர் இல்லாததால் கத்திரிக்காய் சாகுபடி வீழ்ச்சி
  நிகழாண்டு பருவமழை பொய்த்து போனதால், நெல், வாழை, கரும்பு மற்றும் காய்கறித் தோட்டங்கள் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் அனைத்து காய்ந்துள்ளன.
  கடன் வாங்கி சாகுபடி செய்த பயிர்கள் அனைத்தும் தண்ணீர் இல்லாமல் கருகியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாமலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதாலும் விவசாயிகள் குறுகியக்கால பயிர்களான கத்திரிக்காய், வெண்டை உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்ய ஆர்வம் காட்டிய விவசாயிகளும் தற்போது குறைந்தளவு தண்ணீர்கூட இல்லாமல் அவதிப்படுகின்றனர். காய்கறி செடிகள் அனைத்தும் காய்ந்துள்ளன.
  ஊத்தங்கரையை அடுத்த அனுமன்தீர்த்தம் பகுதியிலிருந்து பாவக்கல் செல்லும் சாலையில் உள்ள செல்வராஜ் என்பவரது விவசாயத் தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள கத்திரி செடிகள் தண்ணீர் இல்லாமல் காய்ந்தன.
  வெளியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்த செடிகளை பாதுகாத்தும் கத்திரிக்காய் பிஞ்சுகள் செடியிலே காய்ந்துள்ளன. போதிய சாகுபடி இல்லாததால் செல்வராஜ் கவலையடைந்துள்ளார். இதேபோல, அந்த பகுதியில் விவசாயிகள் பலர் போதிய தண்ணீர் இல்லாமல் விவசாயப் பணிகளை மேற்கொள்ளவில்லை.

  "அம்மா' பண்ணை மகளிர் குழுக்கள் தொடக்கம்
  வேளாண் விளை பொருள்களைக் கொண்டு லாபகரமான தொழில் நடத்தும் வகையிலான "அம்மா' பண்ணை மகளிர் குழுக்கள் தருமபுரி வட்டத்தில் இரு கிராமங்களில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன.
  வேளாண்மைத் துறையின் "அட்மா' திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் வேளாண் விளை பொருள்களைக் கொண்டு லாபகரமான தொழில் நடத்துவதற்காக "அம்மா' பண்ணை மகளிர் குழுக்கள் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்தார்.
  அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் என்.எஸ். ரெட்டியூர், பாப்பிநாயக்கனஅள்ளி ஆகிய கிராமங்களில் இரு பண்ணை மகளிர் குழுக்கள் தொடக்க விழா மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி இலக்கியம்பட்டியிலுள்ள தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனத்தில் (ஐஈடி) வியாழக்கிழமை நடைபெற்றது.
  தருமபுரி வேளாண்மை உதவி இயக்குநர் சொர்ணமாணிக்கம், உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் ஆசைத்தம்பி, ஐஈடி இயக்குநர் பி. மோகன்ராம் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
  இரு குழுக்களுக்கும் தலா ரூ. 10 ஆயிரம் சுழல் நிதியாக வழங்கப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை "அட்மா' திட்ட வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் மகேஸ்வரி, உதவித் தொழில்நுட்ப மேலாளர் பரமசிவம் ஆகியோர் செய்திருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai