4.30 மணி நேரம் கூடுதலாக மின் தடை: இருளில் மூழ்கிய தருமபுரி நகரம்
By DIN | Published on : 27th November 2016 03:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பாலவாடியிலிருந்து தருமபுரி துணை மின் நிலையத்துக்கு உயர் அழுத்த மின்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றதால், தருமபுரி நகரில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நேரத்தை கடந்து, கூடுதலாக நான்கரை மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதனால், தருமபுரி நகரம் இருளில் மூழ்கியது.
தருமபுரி நகருக்கு தடையற்ற மின்சாரம் வழங்குவதற்காக பாலவாடியில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக அங்கிருந்து தருமபுரி துணை மின் நிலையத்துக்கு கூடுதலாக உயர்அழுத்த மின் பாதை அமைக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். இதற்காக தருமபுரி நகரம் உள்பட பல பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், திட்டமிட்டபடி மாலைக்குள் வேலை முடிவடையவில்லை. அறிவிக்கப்பட்ட நேரத்தை காட்டிலும் மின் தடையை நீட்டிப்பதைத் தவிர மின் ஊழியர்களுக்கு வேறு வழியில்லை. இதையடுத்து தொடர்ந்து பணிகள் நடைபெற்றன. இதனால், மின் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து, இரவு 9.30 மணிக்குப் பிறகே மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதனிடையே, தருமபுரி நகரம் மற்றும் பிடமனேரி, நூலஅள்ளி, கடகத்தூர், காமாட்சியம்மன் கோவில் தெரு, முக்கல்நாயக்கன்பட்டி, மூக்கனூர், குண்டல்பட்டி, மதிகோன்பாளையம், ராஜாபேட்டை, சோலைக்கொட்டாய், வெள்ளோலை, குப்பூர், ரெட்டிஅள்ளி உள்ளிட்ட பகுதிகள் இருளில் மூழ்கின.