Enable Javscript for better performance
கருவின் பாலினத்தை கேட்டறிந்தால் 3 ஆண்டு சிறையுடன் ரூ.50 ஆயிரம் அபராதம்: ஆட்சியர் எச்சரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    கருவின் பாலினத்தை கேட்டறிந்தால் 3 ஆண்டு சிறையுடன் ரூ.50 ஆயிரம் அபராதம்: ஆட்சியர் எச்சரிக்கை

    By DIN  |   Published on : 08th October 2016 03:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கருவிலுள்ள குழந்தையின் பாலினத்தைக் கேட்டறியும் கர்ப்பிணிப் பெண்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன், ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கவும் வாய்ப்புள்ளது என மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் எச்சரிக்கை விடுத்தார்.
    தருமபுரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கரு பரிசோதனை மையங்களுக்கான விழிப்புணர்வு மற்றும் மருத்துவமனைகளின் நிர்வாகிகள் பங்கேற்ற பேரிடர் மேலாண்மைக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: மாவட்டத்தில் மொத்தம் 94 ஸ்கேன் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 57 தனியார் மையங்களும், 37 அரசு மையங்களும் அடக்கம். பெண் கருக்கலைப்பு மற்றும் கருவின் பாலினம் கேட்பதும், அறிவிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
    கர்ப்பிணிப் பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யும் மருத்துவரோ அல்லது பரிசோதகரோ கருவின் பாலினத்தை தெரிவித்தால், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளது.
    அதேபோல, கருவின் பாலினத்தை கேட்டறியும் கர்ப்பிணிப் பெண்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளது.
    வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளதால், அனைத்து மருத்துவனைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும். 24 மணி நேரமும் மருத்துவப் பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும். போதிய மருந்து, மாத்திரைகளை இருப்பில் வைத்திருக்க வேண்டும் என்றார்.
    முன்னதாக, டெங்கு விழிப்புணர்வு மற்றும் உலக சுகாதார இயக்கத்தின் விழிப்புணர்வு குறுந்தகடுகளை ஆட்சியர் வெளியிட்டார். கூட்டத்தில் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் ஜானகி, துணை இயக்குநர் டாக்டர் ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai