Enable Javscript for better performance
விபத்து இழப்பீடு வழங்காததால் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி- Dinamani

சுடச்சுட

    

    விபத்து இழப்பீடு வழங்காததால் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி

    By DIN  |   Published on : 08th October 2016 03:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரியில் விபத்து இழப்பீடு வழங்காததால், 2 அரசுப் பேருந்துகள் வெள்ளிக்கிழமை ஜப்தி செய்யப்பட்டன.
    கடந்த 2012 ஜூன் 2-ஆம் தேதி தருமபுரியில் இருந்து பாலக்கோடு வழியாக ஓசூருக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்றது. பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் சென்றபோது இந்தப் பேருந்து விபத்துக்குள்ளானது.
    இதில், பேருந்தில் பயணித்த தருமபுரி மாவட்டம், அதகப்பாடியைச் சேர்ந்த முருகேசன், கடகத்தூரைச் சேர்ந்த மேரி (40) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். சிகிச்சைக்குப் பிறகு இருவரும் தங்கள் பாதிப்புக்கு நிவாரணம் கோரி தனித்தனியாக தருமபுரி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்குகளின் மீது கடந்த 2015 நவ. 30-ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி, மேரிக்கு ரூ.4.53 லட்சமும், முருகேசனுக்கு ரூ.6.73 லட்சமும் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
    ஆனால், போக்குவரத்துக் கழகம் இழப்பீட்டுத் தொகையை வழங்க தாமதித்து வந்தது. எனவே, இருவரும் மீண்டும் நீதிமன்றத்தை அணுகினர். இதில் கடந்த செப். 19-ஆம் தேதி உடனடியாக இழப்பீட்டை வட்டியுடன் வழங்காவிட்டால், 2 பேருந்துகளை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பிறகும் இழப்பீடு வழங்கப்படாத நிலையில், வெள்ளிக்கிழமை வழக்குரைஞர் அர்ச்சுனன் மற்றும் நீதிமன்றப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் 2 பேருந்துகளை ஜப்தி செய்தனர்.
    மினி வேன் தீப்பற்றி சேதம்
    தருமபுரி, அக். 7: தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே வெள்ளிக்கிழமை மினி வேன் தீப்பற்றி எரிந்ததில் சேதமடைந்தது.
    திருச்சியைச் சேர்ந்த ஓட்டுநர் சண்முகசுந்தரம் (31) மினி வேனில் நாமக்கல் மாவட்டம், காட்டுப்புத்தூரிலிருந்து வாழைக்காய் சுமை ஏற்றிக்கொண்டு தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
    தொப்பூர் சுங்கச் சாவடி அருகே வந்தபோது, வேன் என்ஜினில் பழுது ஏற்பட்டு, திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைக் கண்ட ஓட்டுநர் வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு தப்பியோடினார்.
    இதையடுத்து சிறிது நேரத்தில் மளமளவென வாகனம் முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இருப்பினும், வாகனத்தில் முன் பகுதி முழுவதும் தீயில் கருகி சேதமடைந்தது. இந்த விபத்து தொடர்பாக, தொப்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai