Enable Javscript for better performance
தடை செய்யப்பட்ட காற்றொலிப்பான்கள் அகற்றப்படுமா?- Dinamani

சுடச்சுட

    

    தடை செய்யப்பட்ட காற்றொலிப்பான்கள் அகற்றப்படுமா?

    By தருமபுரி,  |   Published on : 15th October 2016 11:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டம் முழுவதும் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகளில் தடை செய்யப்பட்ட காற்றொலிப்பான்கள் சரளமாகப் புழங்குகின்றன. சட்டப்படி இவற்றை அகற்றவும், தொடர் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகம் நேரடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
     ஒலி மாசு காரணமாக காற்றொலிப்பான்களை வாகனங்களில் பயன்படுத்துவது வாகனப் போக்குவரத்துச் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றங்களும், பசுமைத் தீர்ப்பாயங்களும் தொடர்ந்து உத்தரவுகளைப் பிறப்பித்து வருகின்றன. உத்தரவுகள் வரும்போது போக்குவரத்துத் துறை சார்பில் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு சுற்றறிக்கைகளும் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனால், தருமபுரி நகரம் மற்றும் புறநகரப் பகுதிகளில் பெரும்பாலான தனியார் பேருந்துகள் மற்றும் வாகனங்களில் காற்றொலிப்பான்கள் பயன்பாடு இன்னமும் நடைமுறையில் உள்ளன.
     மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இருக்கும் இடங்களைச் சுற்றி 100 மீட்டர் தொலைவு அமைதிப் பகுதி என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தருமபுரி நகரில் அனைத்து வீதிகளிலும் மருத்துவமனைகள் உருவாகியிருக்கின்றன. ஆனாலும், நகருக்குள் சரளமாக காற்றொலிப்பான்கள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.
     கடந்த ஓராண்டில் பெரிய அளவிலான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பேருந்து நிலையங்களில் காற்றொலிப்பான்களை ஓட்டுநர்கள் வெளிப்படையாகவே எடுத்து மாட்டும் நிகழ்வுகளைக் காண முடியும். நகருக்குள் அதிகவேகமாகச் செல்லும் தனியார் பேருந்துகள் மட்டுமின்றி, அரசுப் பேருந்துகளிலுமே கூட காற்றொலிப்பான்கள் இருப்பதைப் பார்க்க முடிகிறது.
     இது தொடர்பாக, காது சிகிச்சை நிபுணர் டாக்டர் சந்திரசேகரிடம் கேட்டபோது, காற்றொலிப்பான்கள் நேரடியாக கேட்கும் திறனைப் பாதிப்பதில்லை என்றாலும், படிப்படியாôக காது கேட்கும் திறன் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது என்றார்.
     "வாகனப் போக்குவரத்து அதிகாரிகள்தான் நேரடியாக காற்றொலிப்பான்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட முடியும் என்றபோதும், சம்பந்தப்பட்டோருடன் பேசி கூட்டாய்வு மேற்கொள்ளப்படும்' என மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
     தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது. சேலம் மாவட்டம், ராசிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்தான் தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பணியிடத்தையும் கூடுதல் பொறுப்பாகக் கவனித்து வருகிறார். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் நேரடி கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைத்து கூட்டாய்வு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
     வெறுமனே காற்றொலிப்பான்களை அகற்றுவதோடு நிறுத்திவிடாமல், அபராதம் விதித்து மேல் நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியர் உத்தரவிட வேண்டும்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai