கோடைகால கால்நடை பராமரிப்பு முறைகள்

தருமபுரி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர் கடைபிடிக்க வேண்டிய பராமரிப்பு முறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் அறிவுரை வழங்கியுள்ளார்.
Updated on
1 min read

தருமபுரி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர் கடைபிடிக்க வேண்டிய பராமரிப்பு முறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் அறிவுரை வழங்கியுள்ளார்.
 இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி: கோடைகாலத்தில் ஏற்படும் அயற்சி பாதிப்பு நாட்டின கால்நடைகளை விட அயல்நாட்டு இன கால்நடைகளையும், கலப்பின கால்நடைகளையும் அதிகம் பாதிக்கும். இதனால் இனவிருத்தியும் பாதிக்கும்.
 மூச்சிறைப்பு, இதய படபடப்பு, நாடித்துடிப்பு பலவீனம் போன்றவை காணப்படும். விழிச் சவ்வுகளில் ரத்தத் திரட்சி ஏற்பட்டிருக்கும். உடல் வெப்பநிலை உயர்ந்து காணப்படும். கருவுற்ற கால்நடைகளுக்கு கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
 கொட்டகை மேலாண்மை: கொட்டகைக்குள் அதிக சூரிய வெப்பம் உள்புகாதவாறு நீளவாக்கில் கிழக்கு-மேற்காக கொட்டகை அமைக்க வேண்டும். நல்ல காற்றோட்டமான வசதி ஏற்படுத்தும் வகையில் மேடான இடத்தில் அமைப்பதுடன், மொத்த அகலம் 25 முதல் 30 அடிக்கு மேல் வைத்து கட்டக் கூடாது.
 பல கொட்டகைகளை ஓரிடத்தில் கட்டும் பட்சத்தில், ஒவ்வொன்றுக்கும் இடையில் குறைந்தது 30 அடிக்கு இடைவெளி விட்டு கட்ட வேண்டும். பக்கச் சுவர்கள் இன்றி கம்பி வலை கொண்டு சுற்றிலும் பாதுகாப்பு அமைத்துக் கொள்ளலாம்.
 ஓலை மற்றும் வைக்கோல் போன்றவற்றைக் கொண்டு கொட்டகை அமைக்கலாம். உலோகத் தகடு, கல்நார் கூரை அமைத்திருந்தால், அதன் மேல் வைக்கோல், தட்டை, தென்னங்கீற்று, பனை ஓலை கொண்டு வெளிப்புறத்தில் மூடலாம்.
 பசலிக்கீரை, கோவக்கொடி, மணிபிளாண்ட் உள்ளிட்ட செடிகளைக் கூரையில் படரவிடலாம். கொட்டகையைச் சுற்றி நிழல் தரும் மரங்களை வளர்ப்பது பாதுகாப்பானது. குளம், குட்டைகளில் குளிக்க வாய்ப்பில்லாத மாடுகளுக்கு பகல் நேரங்களில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்து வெப்பத்தைக் குறைக்கலாம்.
 கறவைப் பசு மற்றும் எருமைகளுக்கு குறைந்தது கோடைகாலத்தில் மூன்று முறை குடிநீர் அளிக்க வேண்டும். தீவன அளவு குறைந்து தண்ணீர் எடுத்துக் கொள்ளுதல் அதிகமாக இருக்கும். முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை மாடுகளை நேரடி சூரிய வெப்பத்திலிருந்து காக்கும் வகையில் நிழலில் அடைப்பது சிறந்தது.
 காலையில் பருவ அறிகுறிகள் தென்படும் மாடுகளை மாலையிலும், மாலையில் பருவ அறிகுறிகள் தென்படும் மாடுகளுக்கு காலையிலும் கருவூட்டல் செய்ய வேண்டும். செயற்கைக் கருவூட்டலுக்குப் பிறகு மாடுகளை சிறிதுநேரம் நிழலில் கட்டி வைத்த பிறகு கொண்டு செல்ல வேண்டும். வீடு போய் சேர்ந்த பிறகு குளிர்ந்த நீரை மாடுகள் மீது ஊற்றி அயர்வினைப் போக்கி சினைபிடிக்கும் வாய்ப்பை அதிகரிக்கலாம்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com