தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவது பாராட்டுக்குரியது என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் எம்.பி. கூறினார்.
தருமபுரி காந்தி நகரில் உள்ள தனியார்
பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பண்புப் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த முகாமில், பங்கேற்க புதன்கிழமை தருமபுரிக்கு வந்த மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் 4 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
வருகிற மே 24-ஆம் தேதியுடன் மத்திய அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த மூன்றாண்டுகளில் ஏற்கெனவே தேர்தல் அறிக்கையில் தெரிவித்த திட்டங்கள் நிறைவேற்றியுள்ளோம். மேலும், அறிக்கையில் கூறாததும் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே, மூன்று ஆண்டு சாதனையை மக்களிடம் எடுத்துக் கூறும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம்.
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை என்பது, அத் துறை அதிகாரிகள் அவர்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சோதனை மேற்கொள்கின்றனர். இதில், எவ்வித உள்நோக்கமோ, வெளிநோக்கமோ எங்களுக்கு கிடையாது.
மத்திய அரசுடன், மாநில அரசு இணைந்து செயல்படுவது பாராட்டுக்குரியது. இரு அரசுகளின் இணைந்து செயல்பட்டால்தான் நாடு முன்னேறும். இதனை சில கட்சிகள் வேண்டும் என்றே விமர்சனம் செய்து வருகின்றன.
மத்திய அரசு, தமிழக அரசுக்கு உறுதுணையாக இருந்ததால்தான், ஜல்லிக்கட்டு சாத்தியமானது. நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து ஆண்டவன் தான் முடிவெடுக்க முடியும் என அவரே சொல்லியிருக்கிறார். எனவே, அதுகுறித்து இனி ஆண்டவனிடம் தான் கேட்க வேண்டும்.
அதேபோல, ஜெயலலிதா இறப்புக்கு பிறகு அதிமுகவில் இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லாததால், அக் கட்சியில் சில பிரச்னைகள் ஏற்பட்டன. இது, அதிமுகவின் உள்கட்சி பிரச்னை. இருப்பினும், இதையொட்டி, ஆட்சியில் தொடக்கத்தில் சில தடுமாற்றம் ஏற்பட்டது. ஆனால், தற்போது அதனை ஆட்சியாளர்கள் சமாளித்துவிட்டனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.