தேசிய வங்கிகளின் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி வலியுறுத்தினார்.
தருமபுரியில் விவசாயிகள் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்குப் பின்னர் எஸ்.ஏ.சின்னசாமி செய்தியாளர்களிடம் கூறியது: தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அதேபோல, நீதிமன்ற உத்தரப்படி, சிறு, குறு விவசாயிகள், பெரிய விவசாயிகள் எனப் பாகுபாடின்றி, கூட்டுறவு வங்கிகளில் உள்ள அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
அதேபோல, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண் வாரியத்தை அமைத்து, காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலுவையிலுள்ள எண்ணேகொல்புதூர் தென்பெண்ணை ஆற்றிலிருந்து தும்பலஅள்ளி மற்றும் படேதலாவ் கால்வாய்களை இணைக்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். அண்மையில் பெய்த மழையால், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் சேதமடைந்த மா, தென்னை, வாழை ஆகியவற்றை கணக்கெடுத்து, அதற்கான நிவாரணம் வழங்க வேண்டும்.
விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடுவுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதற்காக நிலமும் கையகப்படுத்தப்பட்டது. இருப்பினும், மணிமண்டபம் கட்டும் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. எனவே, இப் பணிகளை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும். வருகிற ஜூலை 5-ஆம் தேதி விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி உழவர் தின பேரணி தருமபுரியில் நடத்தப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.