பாலக்கோடு அருகே வீட்டில் மது பதுக்கி விற்பனை செய்ததைக் கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே தளவாய்அள்ளி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில், கடந்த சில நாள்களாக மது பதுக்கி வைத்து முறைகேடாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அப்பகுதி பொதுமக்கள், வீட்டில் மது விற்பனை செய்ய வேண்டாம் என அவர்களிடம் வலியுறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தொடர்ந்து அந்த வீட்டில் மது விற்பனை நடந்து வந்துள்ளது. இதனால், அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் புதன்கிழமை மாலை அந்த வீட்டின் முன் திரண்டு முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், வீட்டினுள் சென்று மதுப்புட்டிகளை எடுத்து வந்து உடைத்தனர்.
இது குறித்து, தகவல் அறிந்த பாலக்கோடு போலீஸார், அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். மேலும், முறைகேடாக வீட்டில் மது பதுக்கி விற்பனை செய்ததாக சாந்தா (42) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.