சுடச்சுட

    

    ஒகேனக்கல்லில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம்: பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்க வனத்துறை புதிய முயற்சி

    By நமது நிருபர், தருமபுரி  |   Published on : 02nd January 2017 09:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒகேனக்கல்லில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளதன் மூலம் வீசியெறிப்படும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில் கழிவுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
     சுற்றுலாப் பயணிகள் தண்ணீர் குடித்துவிட்டு வீசியெறியும் பாட்டில் கழிவுகளைக் குறைக்கும் வகையில் வனத் துறையினர் மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
     தருமபுரி மாவட்டம் 40 சதம் பசுமைப் போர்வையைக் கொண்டது. இதன் பெரும்பகுதி ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்தைச் சுற்றியுள்ள மலைக்காடுகள். பேவனூர் சோதனைச் சாவடியில் இருந்து ஒகேனக்கல் வரையிலான மலைப்பாதை, வனத் துறையின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.
     இந்த வனத்தின் உள்பகுதியில் யானைகள், மான்கள், காட்டுப் பன்றி மற்றும் காட்டு மாடுகளும் உள்ளன. ஒகேனக்கல்லைப் பொருத்தவரை தமிழ்நாட்டின் மிக முக்கிய நதியான காவிரியாற்றின் தமிழ்நாட்டு நுழைவுப் பகுதி.
     எனவே, இங்கு பிளாஸ்டிக் பொருள்களின் தடை நீண்டகாலமாக அமலில் உள்ளது. ஆனாலும், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், டம்ளர்கள் வீசப்பட்டிருப்பதை பல இடங்களில் காண முடியும்.
     சூழலைக் கெடுக்கும் இந்தப் பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்கும் வகையில் கடந்த ஜூன் மாதம் சில நடவடிக்கைகள் வனத் துறையால் எடுக்கப்பட்டன. வனப் பகுதிக்குள் பிளாஸ்டிக் கழிவுகளை வீசினால் ரூ. ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
     அதோடு, தண்ணீர் குடித்துவிட்டு பாட்டில்களை வீசியெறிவதைக் குறைக்கும் வகையில் கடந்த ஜூன் மாதம் அருவிக்கு அருகே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரம் நிறுவப்பட்டது.
     தமிழ்நாடு காடு வளர்ப்புத் திட்டத்தின்கீழ், ஊட்டமலை பகுதி வனக்குழுவுக்கு வழங்கப்பட்ட ரூ. 3.20 லட்சம் நிதியிலிருந்து இந்த இயந்திரம் வாங்கப்பட்டது. இதில் உள்ள பச்சைப் பொத்தானை அழுத்தி ரூ. 2 நாணயத்தைச் செலுத்தினால் ஒரு லிட்டர் தண்ணீர் வரும்.
     கருப்புப் பொத்தானை அழுத்தி ரூ. 5 நாணயத்தைச் செலுத்தினால் 5 லிட்டர் தண்ணீர் வரும். சிவப்புப் பொத்தானை அழுத்தி ரூ. 10க்கான நாணயத்தைச் செலுத்தினால் 10 லிட்டர் தண்ணீர் வரும்.
     காலி பாட்டில்களை மீண்டும் பயன்படுத்தும் போது, ஒவ்வொரு முறையும் தண்ணீர் பாட்டில்களை குப்பையாக வீசியெறிவது பெருமளவு குறைக்கப்படும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் மாவட்ட வன அலுவலர் க. திருமால்.
     கடந்த டிசம்பர் மாதம் மட்டும் இந்த இயந்திரத்தில் ரூ. 3 ஆயிரம் கிடைத்துள்ளது. ஏறத்தாழ 3 ஆயிரம் லிட்டர் தண்ணீர் விற்பனையாகி உள்ளது. இந்த வகையில் ஒரு மாதத்தில் குறைந்தது ஆயிரம் பாட்டில்களையாவது வீசியெறிவதில் இருந்து தடுத்திருக்கிறோம் என உறுதியாகக் கூறுகின்றனர் வனத் துறைப் பணியாளர்கள்.
     பயணிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதுடன், சூழலுக்கு விளையும் கேட்டை நம்மால் முடிந்தளவுக்குத் தடுத்திருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்துவதுமே இந்த முயற்சியின் நோக்கம். இத்தகைய சிறு முயற்சிகளுக்கு, பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியமே!
     
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai