சுடச்சுட

    

    பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் திறப்பு

    By தருமபுரி/ கிருஷ்ணகிரி/ ஒசூர்,  |   Published on : 09th January 2017 08:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டது.
     தருமபுரி ஸ்ரீ பரவாசுதேவர் கோயிலில்...
     108ஆவது திருப்பதி என்றழைக்கப்படும் தருமபுரி கோட்டை கோயில் அருள்மிகு வரமகாலட்சுமி உடனுறை பரவாசுதேவ சுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசியையொட்டி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டது.
     வரமகாலட்சுமியுடன் பரவாசுதேவ சுவாமியுடன் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பரமபதவாசலை கடந்துச் சென்றனர். பக்தர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
     நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் சி. நித்யா, செயல் அலுவலர் மு. முருகன், அர்ச்சகர் கே. விஜயநாகவ பட்டாச்சாரியார் உள்ளிட்டோர் செய்திருந்தனர். ஆர். வெங்கடாஜலபதி குழுவினரின் மங்கல இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
     கிருஷ்ணகிரியில்...
     கிருஷ்ணகிரி பழையப்பேட்டையில் உள்ள மலையப்ப சீனிவாச பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டது.
     சிறப்பு அலங்காரத்தில் சீனிவாச பெருமாள் பரமபதவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
     இதேபோல, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை வடக்கு மாடவீதியில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் நடைபெற்ற பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
     காட்டிநாயனப்பள்ளியில் உள்ள காட்டு வீர ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள வெங்கட்ரமண சுவாமி சன்னதியில் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
     ஒசூரில்...
     சூளகிரி ஸ்ரீ வரதராஜபெருமாள் கோயில், தேன்கனிக்கோட்டை அருள்மிகு செüந்தரவள்ளி சமேத பேட்டராயசுவாமி கோயில்களில் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
     பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. ஸ்ரீதேவி பூதேவி சமேத பேட்டராயசுவாமி சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
     கடும் பனிப் பொழிவையும் பொருட்படுத்தாமல் அதிகாலையிலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
     ஒசூர் மலைக்கோயிலான வெங்கடேஷ் நகரில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் நடைபெற்ற பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு லட்டு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
     ஒசூர் பார்வதி நகரில் உள்ள பிரசன்ன வெங்டேஸ்வர சுவாமி கோயில்,
     பாகலூர் சாலையில் உள்ள கிருஷ்ணர் கோயில், நேத்தாஜி சாலையில் உள்ள கோதண்டராமர் கோயில், ஒசூர் கோகுல் நகரில் உள்ள ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோயில், வெங்கடேஸ்வர சுவாமி, குடிசெட்லு திம்மராயசுவாமி கோயில், சூளகிரி கோபசந்திரம் தட்சிண திருப்பதி பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் திறக்கப்பட்டது.
     அரூரில்...
     பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூர் சீனிவாச பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் சங்கு, நாதம், மங்கள வாத்தியங்கள் முழங்க பரமபதவாசல் திறக்கப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
     இதேபோல, அரூர் பழையப்பேட்டை கரியபெருமாள் திருக்கோயிலில் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai