Enable Javscript for better performance
வறட்சியின் பிடியிலிருந்து தருமபுரியைக் காக்க நிர்வாகம் முழுத் தயாரிப்பில் இறங்க வேண்டும்: பாமக வலியு- Dinamani

சுடச்சுட

    

    வறட்சியின் பிடியிலிருந்து தருமபுரியைக் காக்க நிர்வாகம் முழுத் தயாரிப்பில் இறங்க வேண்டும்: பாமக வலியுறுத்தல்

    By தருமபுரி,  |   Published on : 09th January 2017 09:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வறட்சியின் பிடியில் இருந்து தருமபுரி மாவட்டத்தைக் காத்திட மாவட்ட நிர்வாகம் முழுமையான தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட பாமக நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
     இதுதொடர்பாக பாமக முன்னாள் எம்பி டாக்டர் இரா.செந்தில், மாநிலத் துணைப் பொதுச் செயலர் சாந்தமூர்த்தி, மாநிலத் துணைத் தலைவர் அரசாங்கம் உள்ளிட்டோர் கூட்டாக ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:
     உயர் மதிப்பு பணத்தாள்கள் செல்லாது என மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பால் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுதொழில் செய்வோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலைக்காக வெளிமாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் சென்றுள்ளோரும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
     இந்த நிலையில் மாவட்டத்தின் அடிப்படைத் தொழிலான விவசாயத்துக்கும் மிகப்பெரிய ஆபத்து வந்திருக்கிறது. வழக்கமான மழையளவில் பாதி மழைதான் பெய்திருக்கிறது. அதுவும் பரவலாக அன்றி, ஓரிரு பகுதிகளில் மட்டுமே பெய்தது.
     ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தால் ஓரளவுக்கு குடிநீர்ப் பிரச்னை சமாளிக்கப்படலாம் என்றபோதும், கால்நடைகளும், விவசாயிகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்படப் போவது உறுதி. 2004-ல் ஏற்பட்ட வறட்சி பாதிப்பைக் காட்டிலும் இந்த ஆண்டு கோடையில் கடுமையான பாதிப்பு ஏற்படும்.
     எனவே, மாவட்டத்தின் நீர்த் தேக்கங்கள், ஏரி, கிணறுகளில் தற்போதுள்ள தண்ணீரின் அளவைக் கணக்கெடுத்து, ஒவ்வொரு ஊராட்சி வாரியாக நீர் இருப்பு, வரும் காலத்தில் நீரின் தேவை குறித்த மதிப்பீடு போன்றவற்றை இறுதி செய்து நீர் வரவு- செலவுத் திட்டத்தை அறிவிக்க வேண்டும்.
     தண்ணீரை அதிகம் பயன்படுத்தும் பயிர்களைச் சாகுபடி செய்ய வேண்டாம் என விவசாயிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். குடிநீருக்கும் கால்நடைகளுக்குமான நீர் விநியோகம் தொடர்பான திட்டமிடல் வேண்டும். முழுத் தயாரிப்பையும் மாவட்ட நிர்வாகம் செய்து வெளியிட வேண்டும்.
     விவசாயிகள் அனைவருக்கும் 100 சதவிகித மானியத்தில் சொட்டுநீர்ப் பாசனம் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசனத்துக்கான உபகரணங்களை வழங்க வேண்டும். ஜனவரி இறுதிக்குள் இவற்றைச் செய்யாவிட்டால் பிப்ரவரி முதல் வாரத்தில் பொதுமக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றனர் அவர்கள்.
     பேட்டியின் போது, மாவட்டச் செயலர்கள் இமயவரம்பன், சண்முகம், வன்னியர் சங்கத் துணைத் தலைவர் நம்பிராஜன், முன்னாள் மாட்ட ஊராட்சித் தலைவர் வெங்கடேசன் ஆகியோரும் உடனிருந்தனர்.
     
     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai