சுடச்சுட

  

  பணமற்ற பரிவர்த்தனை இந்தியாவில் சாத்தியமில்லை: வெங்கடேஷ் ஆத்ரேயா

  By தருமபுரி,  |   Published on : 11th January 2017 08:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இன்னும் சில பத்தாண்டுகளுக்கு இந்தியாவில் பணமற்ற பரிவர்த்தனை சாத்தியமில்லை என்றார் பொருளாதார நிபுணரும் பேராசிரியருமான வெங்கடேஷ் ஆத்ரேயா.
   தருமபுரியில் அனைத்து ஊழியர் மற்றும் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில், "செல்லாக்காசும், கருப்புப் பண ஒழிப்பும்' என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது:
   கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி மத்திய அரசு உயர்மதிப்புள்ள பணத்தாள்களைச் செல்லாது என ஒரு நாள் இரவில் அறிவித்தது. ரூ. 5 லட்சம் கோடி அளவிலான பணம் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு, அந்தத் தொகைக்கும் அதிகமான பணம் வங்கிக் கணக்குகளில் வந்துவிட்டது. கறுப்புப் பணம், கள்ளப் பணம் எங்கே?
   மொத்த புழக்கத்திலிருந்த பணத்தாள்களில் 86.4 சதவிகிதமான ரூ. 500, 1000 தாள்களை முடக்கியதால் என்ன விதமான பாதிப்புகள் ஏற்படும் என்பது மத்திய அரசுக்குத் தெரியாதா?
   நாட்டின் மொத்த தொழிலாளர் எண்ணிக்கையில் முறைசாராத சாதாரண தொழிலாளர்களின் எண்ணிக்கை 93 சதவிகிதம். இவர்கள் அனைவரும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள்.
   நூற்றுக்கும் மேற்பட்டோர் நாடு முழுவதும் உயிரிழந்தும் ஒருவர்கூட வருத்தம் தெரிவிக்கவில்லை. அசெளகர்யம் ஏற்படத்தான் செய்யும் என்கிறார்கள். மெல்ல மெல்ல பணத் தட்டுப்பாட்டு நிலையை இயல்பாக்குவதற்கு முயற்சிக்கிறார்கள்.
   இந்த அறிவிப்பின்போது வேலையில்லாத் திண்டாட்டம் குறையும், விலைவாசி குறையும் என்றெல்லாம் வாக்குறுதிகளை அளித்தார்கள். இத்தனை நாட்களுக்குப் பிறகு எந்த விலையும் குறையவில்லை.
   1.15 கோடி புதிய பணியிடங்கள் நாடு முழுவதும் உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், 1.15 லட்சம் பணியிடங்கள் கூட உருவாக்கப்படவில்லை. வேலையின்மை பூதாகரமானதாக மாறியிருக்கிறது. தொழில் துறை மந்தமாகியிருக்கிறது.
   பணத்தாள்களை செல்லாது என அறிவித்த 53 நாட்களில் மட்டும், தொழில் முடக்கம், வேளாண் முடக்கம் மற்றும் மனித உழைப்பு வீணானது உள்ளிட்டவற்றால் ஏற்பட்ட இழப்பு ரூ. 1.28 லட்சம் கோடி என அரசு சார்ந்து இயங்கும் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்திருக்கிறது.
   மீண்டும் இந்தப் பணப்புழக்க முடக்கம் எப்போது சீரடையும் என்பதையும் யாராலும் சொல்ல முடியவில்லை. ஆனால், இப்போது பணமில்லா பரிவர்த்தனையை நோக்கிச் செல்ல வேண்டும் என்கிறார்கள்.
   நாட்டின் மொத்த மக்கள்தொகையில் வெறும் 26 சதவிகிதம் பேர் மட்டுமே இணையதளத்தைப் பயன்படுத்துகிறார்கள். செல்லிடப்பேசி பயன்படுத்துவோரில் வெறும் 30 சதவிகிதம் பேர் மட்டுமே "ஸ்மார்ட் போன்' பயன்படுத்துகிறார்கள்.
   எனவே, இன்னும் சில பத்தாண்டுகள் கடந்தாலும் இந்தியாவில் பணமற்ற பரிவர்த்தனை சாத்தியமில்லை. அதோடு பணமற்ற பரிவர்த்தனை எளிதானதும் அல்ல, சேவைக் கட்டணம் என்ற செலவும் கூடும் என்றார் ஆத்ரேயா.
   கருத்தரங்குக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலர் ஏ. சேகர் தலைமை வகித்தார்.
   
   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai