சுடச்சுட

    

    பேருந்து நிலையத்தில் பழுதான கண்காணிப்புக் கேமராக்கள் சீர் செய்யப்படுமா? ஆர்.ராதாகிருஷ்ணன்

    By தருமபுரி,  |   Published on : 12th January 2017 08:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில், பழுதாகியுள்ள கண்காணிப்புக் கேமராக்களை விரைந்து சீர்செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     தருமபுரி நகரின் மையப் பகுதியில் புறநகர் பேருந்து நிலையம் உள்ளது. இப் பேருந்து நிலையத்தில் 400-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் மற்றும் 120-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் நாள்தோறும் வந்து செல்கின்றன.
     இப் பேருந்துகள் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், அரூர், காரிமங்கலம், பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கும் பேருந்துகள் சென்று வருகின்றன. மேலும், இப்பேருந்து நிலையத்தை ஒட்டியே நகர் பேருந்து நிலையம் உள்ளது.
     இதனால், இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன், காவல் உதவி மையம் அமைக்கப்பட்டது. குற்றச் செயல்களைத் கண்காணிப்பதற்காக காவல் உதவி மையத்தின் மேல் பகுதியில் மூன்று கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டன.
     இதுதவிர, திருப்பத்தூர் சாலை மற்றும் நான்குமுனை சாலைச் சந்திப்பு ஆகிய இடங்களிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு, அக் கேமராக்களின் இணைப்பு, காவல் மையத்தில் உள்ள கணினியில் இணைக்கப்பட்டன. இவற்றை அங்கு பணியாற்றும் காவலர்கள் பார்வையிட்டு கண்காணித்து வருகின்றனர்.
     இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் பேருந்து நிலையத்தில், உள்ள கண்காணிப்புக் கேமராக்கள் பழுதடைந்தன. இதனை சீர்செய்ய இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
     இதனால், தற்போது புறநகர் பேருந்து நிலையத்தில், திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பேருந்து நிலையத்துக்கு வருவோரிடம் செல்லிடப்பேசி, பணம், நகைகள் பறிப்பு உள்ளிட்டவை அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. எனவே, குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தி, பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை பாதுகாக்க பழுதடைந்துள்ள கேமராக்களை விரைந்து சீர் செய்ய வேண்டும்.
     மேலும், பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள சாலைகள் மற்றும் நகரின் முக்கியப் பகுதிகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தி குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்திட காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
     
     
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai