சுடச்சுட

    

    தருமபுரியில் பதிவேடுகளை முறையாக பராமரிக்காத தனியார் ஸ்கேன் மையத்துக்கு வெள்ளிக்கிழமை "சீல்' வைக்கப்பட்டது.
     தருமபுரி மாவட்டத்தில் சுமார் 57 தனியார் ஸ்கேன் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர, அரசு ஸ்கேன் மையங்களும் உள்ளன. பெண் சிசுக்கொலை ஒழிக்கவும், கருக்கொலைகளைத் தடுக்கவும், ஸ்கேன் மையங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில், கருவில் உள்ள பாலினம் குறித்து தெரியப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
     இந்த நிலையில், தருமபுரியில் தனியார் ஸ்கேன் மையத்தில் முறைகேடாக கருவில் உள்ள பாலினம் குறித்து தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதனால், இம் மாவட்டத்தில், கருக்கொலைகள் அதிகரிப்பதாகவும், அதனால் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு வந்த புகாரைத் தொடர்ந்து, 6 பேர் கொண்ட குழுவினர் தருமபுரிக்கு திடீரென வருகை தந்தனர்.
     இதைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் கே.நெடுமாறன் உள்ளிட்டோரும் குழுவினருடன் ஆய்வில் ஈடுபட்டனர்.
    தருமபுரி நகரில் ராஜகோபால் பூங்கா அருகே உள்ள ஒரு தனியார் ஸ்கேன் மையத்தில் சோதனை மேற்கொண்டனர். சுமார் 4 மணி நேரம் அந்த மையத்தில் அதிகாரிகள் குழு மேற்கொண்ட சோதனையில், ஸ்கேன் எடுத்தவர்களின் பதிவேடுகள் முறையாகப் பராமரிக்காதது தெரியவந்தது. இதையடுத்து, அந்த மையத்துக்கு அதிகாரிகள் குழுவினர் "சீல்' வைத்தனர்.
     இதுகுறித்து தருமபுரி மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் கே.நெடுமாறன் கூறியது: பெண் கருக்கொலை உள்ளிட்ட குற்றச் செயல்கள் மூலம் மற்ற மாவட்டங்களைக் காட்டிலும், தருமபுரி மாவட்டத்தில், பெண் குழந்தைகள் விகிதம் சற்றே குறைவாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக, மத்திய கண்காணிப்புக் குழுவினர் ஸ்கேன் மையங்களில் ஆய்வு நடத்துவது வழக்கம். தருமபுரி நகரில் உள்ள தனியார் ஸ்கேன் மையத்தில் ரசீதுகள், பதிவேடுகள் முறையாக பராமரிக்காததையடுத்து, அந்த மையத்துக்கு "சீல்' வைக்கப்பட்டது. மேலும், மத்தியக் குழுவினர் இதுகுறித்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வர் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai