Enable Javscript for better performance
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பொங்கல் கொண்டாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பொங்கல் கொண்டாட்டம்

    By தருமபுரி/ கிருஷ்ணகிரி,  |   Published on : 16th January 2017 08:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி தருமபுரி மாவட்டத்தில் தை முதல் நாளான பொங்கல் நிகழ்ச்சிகளும், இரண்டாம் நாளாக மாட்டுப் பொங்கல் நிகழ்ச்சிகளும் கொண்டாடப்பட்டன.
     ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தருமபுரியின் கிராமப் பகுதிகளில் விவசாயக் குடும்பத்தினர் தங்கள் பொங்கல் கொண்டாடத்தை தங்களின் கழனியில் (வேளாண் நிலம்) கொண்டாடினர்.
     மாடுகள், ஆடுகளைக் குளிப்பாட்டி வண்ணங்களைப் பூசி, கழனியில் இனிப்பு மற்றும் வெள்ளைப் பொங்கல் வைத்துப் படையலிட்டனர். தொடர்ந்து படையலில் வைக்கப்பட்ட தீர்த்தத்தை கால்நடைகளின் மீது தெளித்து, பொங்கலோ பொங்கல், பொலியோ பொலி என முழக்கங்களை எழுப்பினர்.
     பிறகு பசுக்களுக்கு தாலி கட்டும் சிறு சடங்களும் பல இடங்களில் பார்க்க முடிந்தது. அப்போது சேவு அரிசி தூவி பசுக்களை வாழ்த்தினர். படையலிடப்பட்ட பொங்கல் மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் ஊட்டிவிடப்பட்டது.
     பொங்கல் விழாக்கள்:
     தருமபுரி நகரிலுள்ள பெரும்பகுதி தெருக்களில் அந்தந்தப் பகுதி இளைஞர் நற்பணி மன்றங்களின் சார்பில் விளையாட்டுப் போட்டிகளுடன், பொங்கல் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி. தும்பாராவ் தலைமை வகித்தார். போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாநிலப் பொருளாளர் கே.ஆர். சக்கரவர்த்தி, மாநிலத் துணைத் தலைவர் பி. சரவணன், மாவட்டச் செயலர் கே.ஜி. கரூரான், ஜனநாயக மாதர் சங்கத்தின் செயலர் எஸ். கிரைஸாமேரி, திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலர் ஊமை ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     பாப்பாரப்பட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் 13ஆம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் மக்கள் ஒருமைப்பாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. காலையில் பொங்கல் வைத்தலும், முற்பகலில் உரி அடித்தல், ஓட்டப் பந்தையம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும், பெண்களுக்கு கோலப் போட்டிகளும், பாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன.
     மாலையில் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் வாலிபர் சங்கத்தின் பகுதித் தலைவர் சிலம்பரசன், செயலர் கே. லோகநாதன், மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் ராஜாமணி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
     முன்னோர் வழிபாடு
     வேறெந்த மாவட்டங்களிலும் காண முடியாத ஒரு நிகழ்வு பொங்கல் விழாக்களுடன் தருமபுரி மாவட்டப் பகுதிகளில் நடத்தப்படுகிறது.
     முன்னோர்களைப் புதைத்த இடத்திலும், எரித்த இடத்திலும் கோலமிட்டு, மலர்கள் தூவி வழிபாடு நடத்துவது மாட்டுப் பொங்கல் நாளன்று நடத்தப்பட்டது. அதே இடத்திலும் கூட பொங்கல் வைத்து வழிபடுவோரும் இருக்கின்றனர்.
     வேலை நிமித்தம் வெளியூர் சென்றுவிட்ட வாரிசுகள் பொங்கலுக்கு ஊருக்கு வந்து முன்னோர் வழிபாட்டையும் சேர்த்து மேற்கொண்டனர்.
     கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
     கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
     மூன்று நாள்கள் நடைபெறும் பொங்கல் விழாவின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை வீட்டு வாசல்களில் வண்ண கோலமிட்டு புதுப்பானையில் அரிசி,பால் ஊற்றி பொங்கல் செய்து கால்நடைகளுக்குப் படையிலிட்டு வழிபடுவர்.
     காலையிலே கரும்பு, காய்கறிகள், பழங்கள், மஞ்சள் கிழங்கு வைத்து சூரியனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படும். பின்னர், புத்தாடை அணிந்து பொங்கலோ, பொங்கல் என உற்சாகமாக வரவேற்று பொங்கலை கொண்டாடுவர்.
     அன்பும், நட்பும், ஒற்றுமையும் நிலைத்து நிற்கும் வகையில் நண்பர்களுக்கும், உறவினர்களையும் சந்தித்து பொங்கல் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
     கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் பொங்கல் விழாவின் இரண்டாம் நாளான மாட்டுப் பொங்கல் தினத்தில் தங்களது கால்நடைகளின் கொம்புகளுக்கு கலர் வண்ணங்கள் பூசியும், புதுப்பானையில் பொங்கலிட்டு, அவற்றிற்கு வழங்கி மந்தையில் ஓடவிட்டு தங்கள் மகிழ்ச்சியை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வெளிபடுத்தினர்.
     வேப்பனஅள்ளி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் அலுவலகம் முன் திமுக சார்பில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மண்பானையில் பொங்கல் வைத்து சூரியனை வணங்கினர்.
     அனைத்து மதத்தினரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த விழாவில் வேப்பனஅள்ளி சட்டப்பேரவை உறுப்பினர் முருகன், மேற்கு மாவட்ட திமுக பொருளாளர் ஜெயராமன், ஒன்றியச் செயலாளர் ரகுநாத் மற்றும் நிர்வாகிகள் கிருஷ்ணன், அகமத்பாஷா, கலீல், சதாசிவம், மாதேஸ்வரன், சான்பாஷா, முனியேகவுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     கிருஷ்ணகிரி அரசுக் குடியிருப்பு, காவேரிப்பட்டணம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொங்கல் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
     பல்வேறு குடியிருப்புகளில் வழுக்கு மரம் ஏறுதல், ஓட்டப் பந்தயம், கயிறு இழுத்தல், இசை நாற்காலி, கோலப்போட்டி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
     
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai