சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டத்தில் நிலவும் வறட்சி காரணமாக நிகழாண்டு பல்வேறு பகுதிகளில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படவில்லை.

    நாட்டு மாடுகளின் அழிவு குறித்த தொடர் விவாதங்கள் பலவாறாக மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. தருமபுரி மாவட்டத்தை பொருத்தவரை பட்டி மாடுகள் என்ற பெயரில் நாட்டு மாடுகள் ஆயிரக்கணக்கில் வளர்க்கப்பட்டு வருகின்றன.

    பெரும்பாலும் ஒகேனக்கல் மலைப் பகுதிகளை நம்பியே இந்த பட்டிமாடுகள் வளர்க்கப்படுகின்றன. இவற்றை வளர்ப்போர் ஓராண்டின் பெரும்பகுதி நாட்கள் மாடுகளுடன் ஒகேனக்கல் மலைப்பகுதிக்குச் சென்று தங்கிவிடுகின்றனர்.

    ஒரு குடும்பத்தினர் 50 முதல் 100 மாடுகள் வரை வளர்க்கிறார்கள். பொங்கல் காலத்தில் மட்டும் மாடுகளுடன் ஊருக்குத் திரும்பும் இவர்கள், மாட்டுப் பொங்கலை கோலாகலமாகக் கொண்டாடிவிட்டு மீண்டும் மேய்ச்சலுக்காக ஒகேனக்கல் மலைப்பகுதிகளுக்குச் சென்று வந்துள்ளனர்.

    ஆனால், இந்த ஆண்டு பெரும்பாலான பட்டி மாடுகள் வளர்ப்போர் பொங்கலைக் கொண்டாடவில்லை. இதுகுறித்து தருமபுரி நார்த்தம்பட்டி அருகேயுள்ள குப்பாகவுண்டர் தோட்டத்தைச் சேர்ந்த பாரதிராஜா கூறியது:
     எங்கள் தாத்தா காலத்திலிருந்தே பட்டி மாடுகள் வளர்த்து வருகிறோம். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது மட்டுமே காடுகளில் இருந்து வீட்டுக்கு ஓட்டி வந்து பொங்கல் கொண்டாடுவோம்.

    ஆனால், இந்த முறை மழையில்லாமல் காடுகளும் வறண்டே காணப்படுவதால், 4 மாதங்களுக்கு முன்பே ஒகேனக்கல் காட்டைவிட்டு வெளியே வந்துவிட்டோம். ஊருக்கு கொண்டு வந்து என்ன செய்வதெனத் தெரியாமல், பொம்மிடி பகுதியிலுள்ள காட்டுப் பகுதிக்குள் ஓட்டிச் சென்றுள்ளோம். இதனால், இம்முறை பொங்கல் கொண்டாடவில்லை என்கிறார் பாரதிராஜா.

    நார்த்தம்பட்டி பகுதியில் மட்டும் சுமார் 300-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள் வளர்க்கப்படுகின்றன. பெரும்பாலும் காளை மாடுகளாக (எருதுகள்) இருக்கும் இவற்றில், கன்றுகளை விவசாயப் பணிகளுக்காக விவசாயிகள் வாங்கிச் செல்கின்றனர்.

    எனினும் ஓரிரு குடும்பத்தினர் மட்டும் ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே பட்டிப் பொங்கல் கொண்டாடியதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai