Enable Javscript for better performance
சோதனைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் கிராமப்புற மாணவர்களுக்கே அதிகம்: "சிகரத்தை வெல்வோம்' நிகழ்ச்சியில் தரு- Dinamani

சுடச்சுட

  

  சோதனைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் கிராமப்புற மாணவர்களுக்கே அதிகம்: "சிகரத்தை வெல்வோம்' நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட ஆட்சியர்

  By தருமபுரி,  |   Published on : 20th January 2017 09:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சோதனைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் கிராமப்புற மாணவர்களுக்குத்தான் அதிகம் என்றார் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன்.
   "தினமணி' நாளிதழ் மற்றும் பச்சமுத்து கலை, அறிவியல் மகளிர் கல்லூரி இணைந்து தருமபுரியில் வியாழக்கிழமை நடத்திய "சிகரத்தை வெல்வோம்' (பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு வழிகாட்டி) நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது:
   கடந்த 2014-15ஆம் கல்வியாண்டில் தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற 19 ஆயிரம் மாணவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கல்லூரிக் கல்விக்குச் செல்லாமல் நின்றுவிடுவது காணப்பட்டது.
   அதன்பிறகு, ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்கள் மேற்கொண்ட தொடர் முயற்சியால் பெரும் மாற்றம் ஏற்பட்டது. தற்போது 2015-16ஆம் கல்வியாண்டில் 654 பேர் மட்டுமே கல்லூரிக் கல்விக்குச் செல்லாமல் படிப்பை நிறுத்தியுள்ளனர்.
   இந்திய அளவில் 100 பேருக்கு 23 பேர் மட்டுமே கல்லூரிக்குச் செல்கின்றனர். தமிழ்நாட்டில் தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் ரூ. 19 ஆயிரம் கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்து சிறப்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இந்த எண்ணிக்கை 44 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
   அதிலும் தருமபுரி மாவட்டத்தில் 90 சதவிகிதத்தையும் தாண்டி உயர் கல்வி செல்வோரின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ஆசிரியர்களின் கடுமையான உழைப்பு.
   அரையாண்டுத் தேர்வின்போதே தோல்வியடைந்த மாணவர்களைப் பட்டியல் எடுத்து அவர்களுக்குத் தனிப் பயிற்சி வழங்குகிறோம். எளிதாக மதிப்பெண் எடுக்கும் வகையிலான வினா-விடை வங்கியும் வழங்குகிறோம். மேலும், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த தகவல்களைத் தெரிவிக்க ஒவ்வோர் அரசுப் பள்ளியிலும் தனிப் பிரிவை அமைத்திருக்கிறோம். வழக்கமாக இதுபோன்ற பிரிவுகள் கல்லூரிகளில்தான் இருக்கும்.
   சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு ஒவ்வொரு பாட வாரியாக தயாரிக்கப்பட்ட குறுந்தகடுகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் தினமும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியும் அரசுப் பள்ளிகளில் நடத்தப்படுகின்றன. நாங்களெல்லாம் "தினமணி'யிலிருந்து தகவல்களை சேகரித்துத்தான் படித்து வளர்ந்தோம். இப்போது "தினமணி'யின் இதுபோன்ற நேரடியான நிகழ்ச்சிகளின் மூலம் மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
   தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி அளிப்பதற்காக ரூ. 10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்காக மாநில திட்டக் குழுவின் சார்பிலும் ரூ. 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
   சோதனைகளை எதிர்கொள்ளும் ஆற்றலும் கிராமப்புற மாணவர்களுக்குத்தான் அதிகமாக இருக்கும். அந்த வகையில் தற்போது இங்கு வந்துள்ள அனைவருமே சிகரத்தைத் தொட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது என்றார் விவேகானந்தன்.
  எழுதிப் பழகுவது...ஆசிரியர்கள் எம். அருண், ஆர். நடராஜன் ஆகியோர் பேசியது:
   மாணவர்களுக்கு என்ன படிக்கலாம் எனத் தெரியும். ஆனால், எப்படிப் படிப்பது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். பாடப் புத்தகத்தை முழுவதும் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொண்டதை எழுதிப் பார்க்க வேண்டும். படிப்பது, கேட்பது எதுவானாலும் முழுமையான மன திருப்தியுடன் மேற்கொள்ள வேண்டும்.
   படித்து நன்கு புரிந்ததை, கட்டாயம் எழுதிப் பார்க்க வேண்டும். இவ்வாறு எழுதிப் பார்க்கும்போது தேர்வில் குறிப்பிட்ட நேரத்தில் பதில் அளிக்க முடியும். அதேபோல், தேர்வில் முதலில் எளிமையான கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும். கடினமான கேள்விகளைக் கண்டு அச்சப்படக் கூடாது.
   பாடத்தில் உள்ள முக்கியச் சொற்களை அடிக்கடி நினைவுப்படுத்த வேண்டும். மாணவர்கள் படிக்கும்போது மகிழ்ச்சியான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தவறு ஏதும் செய்யாமல் இருந்தால் மகிழ்ச்சியான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்றனர்.
   இடையூறுகளை எதிர்த்துப் போராடி...
   மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி. மகேஸ்வரி பேசியது:
   மாணவர்கள் லட்சியத்தை அடைய கடின உழைப்பு தேவை. விடாமுயற்சி, லட்சியத்தை அடைவோம் என்ற தன்னம்பிக்கை ஆகியவையும் அவசியம். இடையே எவ்விதமான இடையூறுகள் வந்தாலும் அதனை எதிர்த்துப் போராடி வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் சாதிக்க முடியும்.
   கடந்த 4 ஆண்டுகளில், தருமபுரி கல்வியில் பின்தங்கிய மாவட்டம் என்ற நிலையை மாற்றி 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் நல்ல தேர்ச்சியைக் கொடுத்துள்ளோம். அதேபோன்று பள்ளிக் கல்வியை முடித்த மாணவ, மாணவிகள் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் சென்றுள்ளனர். நமது மாவட்ட மாணவர்களுக்காக "தினமணி' சிகரத்தை வெல்வோம் நிகழ்ச்சியை நடத்தியது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. வாழ்க்கையில் நாம் வெற்றிபெற வேண்டும் எனில், நல்ல விஷயங்களை மனதில் பதிய வைக்க வேண்டும் என்றார் மகேஸ்வரி.
   நிகழ்ச்சிக்கு "தினமணி' ஆசிரியர் கி. வைத்தியநாதன் தலைமை வகித்துத் தொடக்கவுரை நிகழ்த்தினார். கல்லூரித் தலைவர் ப. பாஸ்கர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்.
   முன்னதாக, துணைச் செய்தி ஆசிரியர் பா. ராஜாமுருகுசெழியன் வரவேற்றார். முடிவில் கிளை மேலாளர் இரா. பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
   தனித்துவம் அறிந்து செயல்படுவீர்!
   மாவட்ட வன அலுவலர் க. திருமால் பேசியது:
   தருமபுரியில் இருந்து 20ஆவது கி.மீ. தொலைவில் நான் பிறந்த கிராமம் உள்ளது. எங்கள் கிராமத்துக்கு காலையில் ஒருமுறையும் மாலையில் ஒருமுறையும் நகரப் பேருந்து இயக்கப்படும். இன்றுவரை அந்த கிராமத்துக்கு நாளிதழ் எதுவும் வருவதில்லை.
   ஏன் இதை உங்களிடம் கூறுகின்றேன் என்றால், கிராமத்தில் பிறந்த மாணவர்களாலும் சாதிக்க முடியும், உங்களாலும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தத்தான். நம்மை நாம் நம்ப வேண்டும். மற்றவர்கள் நம்மை நம்ப வேண்டும் என எண்ணுவது தவறு.
   ஏதாவது ஒரு துறையைத் தேர்வு செய்து கொண்டு, என்னை விட்டால் யாரும் சாதிக்க முடியாது என்ற எண்ணத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
   கடின உழைப்புக்கு இணையானது வேறேதும் இல்லை. வெற்றி தாமதம் ஆகலாம். ஆனால், வெற்றி மறுக்கப்படாது. இரண்டு முறை தோல்வியைத் தழுவினாலும் 3ஆவது முறை கடின உழைப்பு இருந்தால் வெற்றி பெறலாம். ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். மாணவர்கள் தங்களின் தனித்துவத்தை அறிந்து அதனை வளர்த்துக் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் நம்மை எவ்வளவு சிரமப்பட்டு படிக்க வைக்கின்றனர் என்பதை அறிந்து, நமது கடமை என்ன? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம் பெற்றோரின் புகைப்படத்தை அறையில் ஒட்டிவைக்க வேண்டும். நமக்கு முன்மாதிரியாக அவர்களின் படத்தை வைக்கும்போது தவறு செய்யும் எண்ணம் தோன்றாது. நண்பர்களிடம் இருந்து நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார் திருமால்.
   புரிந்துப் படித்தால் "சென்டம்' பெறுவது எளிதே!
   புரிந்து கொண்டு படித்தால் நூற்றுக்கு நூறு எடுப்பது எளிதானதே என்றார் கல்வியாளர் ஐசக் நியூட்டன்.
   தருமபுரி "சிகரத்தை வெல்வோம்' நிகழ்ச்சியில் அவர் பேசியது:
   பொதுத் தேர்வுகளுக்குப் படிக்கும் மாணவ, மாணவிகள் படிப்பதை ஒன்றுடன் மற்றொன்றைத் தொடர்புபடுத்திப் படிக்க வேண்டும். அதாவது ஒரு பாடத்தைப் படித்தால் அதனுடன் தொடர்புடைய மற்ற பாடங்களை இணைத்துப் படிக்க வேண்டும்.
   அப்போது எளிதில் புரியும்; நீண்ட நாட்கள் மறக்காமலும் இருக்கும். பொதுத் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு பதட்டமும், படபடப்பும் இருக்கக் கூடாது. வழக்கமாக பள்ளிகளில் நடைபெறும் வகுப்புத் தேர்வுகளை எழுதுவதைப் போலவே பொதுத் தேர்வுகளை எழுத வேண்டும். பயத்துடன் தேர்வெழுதினால் நன்றாக தெரிந்த பதில்களைக்கூட தவறாக எழுதுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. படிக்கும்போது கண், காது, மூளை, மனம் ஆகியவற்றை ஒருநிலைப்படுத்திப் படிக்க வேண்டும். இந்த நான்கும் வெவ்வேறு திசையில் இருந்தால் படித்த பாடங்கள் நினைவில் இருக்காது. தேர்வுகள் எழுதும்போது மாணவ, மாணவிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
   காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் குறைவான மதிப்பெண் பெற்றதால், பொதுத் தேர்வில் நூற்றுக்கு நூறு எடுக்க இயலாது என்ற தாழ்வு மனப்பான்மை வேண்டாம். படிப்பதை நன்றாகப் புரிந்து படித்தால் ஒவ்வொரு மாணவரும் எந்தப் பாடத்திலும் "சென்டம்' பெறுவது எளிதானதுதான் என்றார் ஐசக் நியூட்டன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai