சுடச்சுட

    

    ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, தருமபுரியில் மூன்றாவது நாளாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டம் வெள்ளிக்கிழமையும் தொடர்ந்தது. இப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கடைகள் அடைக்கப்பட்டன. ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை.
     ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகள் ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரியில் பல்வேறு இடங்களில் இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் தன்னெழுச்சியாக ஆர்ப்பாட்டம், தர்னா போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
    கடைகள் அடைப்பு: இப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தருமபுரி மாவட்ட அனைத்து வணிகர் சங்கம் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை கடைகள் அடைக்கப்பட்டன. மேலும், தொலைத்தொடர்பு நிலையம் முன் வணிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேலை நிறுத்தம்: தருமபுரி அருகே அன்னசாகரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான விசைத்தறிகளை அடைத்து, ஆத்துமேடு, எஸ்.வி.சாலை, சத்திரம் மேல்தெரு வழியாக தொலைத்தொடர்பு நிலையம் வரை விசைத்தறித் தொழிலாளர்கள் பேரணியாகச் சென்றனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், இளைஞர்களுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
    ஆட்டோக்கள் இயங்கவில்லை: தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட அனைத்துத் தொழில்சங்கங்களைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோக்களை இயக்காமல், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தருமபுரி செங்கொடிபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன பழுதுபார்ப்போர் சங்கத்தினர் நூற்றுக்கணக்கானோர், தங்களது கடைகளை அடைத்து தருமபுரி நெசவாளர் காலனியிலிருந்து தொலைத்தொடர்பு அலுவலகம் வரை பேரணியாகச் சென்றனர்.   
    தனியார் பள்ளிகள் விடுமுறை: தருமபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகள் விடுமுறை அறிவித்தன. அரசுப் பள்ளிகள் வழக்கம்போல செயல்பட்டன.
     பாகல்பட்டியில் இளைஞர்கள், பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல, இண்டூர், பாப்பாரப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தர்னா, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன.
     அதேபோல, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம், அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு, நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட சங்கத்தினரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai