சுடச்சுட

  

  ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, பல்வேறு பகுதிகளில் திமுகவினர் வெள்ளிக்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
   தருமபுரி திமுக மாவட்டச் செயலர் பெ.சுப்பிரமணி எம்.எல்.ஏ. தலைமையில் தருமபுரி ரயில் நிலையத்துக்குள் நுழைந்த திமுகவினர், அங்கு முதலாவது ரயில் பாதையில் இறங்கி முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அந்த தடத்தில் வந்த திருநெல்வேலி-தாதர் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தருமபுரி காவல் துணைக் கண்காணிப்பாளர் சோமசுந்தரம், நகர காவல் ஆய்வாளர் த.காந்தி மற்றும் ரயில்வே போலீஸார் அவர்களை ரயில் பாதையிலிருந்து விலக்கினர். இதையடுத்து, அந்த ரயில் சுமார் 5 நிமிடம் தாமதமாக புறப்பட்டது.
   தொடர்ந்து, மூன்றாவது வழித்தடத்தில் வந்த பெங்களூரு-காரைக்கால் பயணிகள் ரயிலை திமுகவினர் மறித்தனர். இதில், ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் இயற்ற வேண்டும். காளைகளை காட்சிப்பட்டியலிலிருந்து நீக்க வேண்டும். இது தொடர்பாக மாநில மற்றும் மத்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர்.
   மறியலில் ஈடுபட்ட திமுக மாவட்டச் செயலர் பெ.சுப்பிரமணி எம்.எல்.ஏ. மற்றும் பென்னாகரம் தொகுதி எம்.எல்.ஏ. இன்பசேகரன், மாவட்டப் பொருளர் தர்மசெல்வன், துணைச் செயலர்கள் சுப்பிரமணி, முனிராஜ் மற்றும் 5 பெண்கள் உள்பட 165 பேரை போலீஸார் கைது செய்தனர்.
  ஒசூரில்...  கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு மேற்கு மாவட்ட திமுக செயலர் தளி ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் வேப்பனப்பள்ளி முருகன் எம்.எல்.ஏ, முன்னாள் நகராட்சித் தலைவர் எஸ்.ஏ.சத்யா மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 220 பேரை போலீஸார் கைது செய்து, பின்னர் விடுதலை செய்தனர்.
  மொரப்பூரில்... மொரப்பூர் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 105 பேரை போலீஸார் கைது செய்தனர். இதில், திமுக தீர்மானக் குழு உறுப்பினர் கீரை எம்.எஸ்.விசுவநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
  ஊத்தங்கரையில்...  கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக-வினர்  சார்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு, கிருஷ்ணகிரி மாவட்டச் செயலர் சுகவனம் தலைமை வகித்தார். சட்டபேரவை உறுப்பினர் செங்குட்டுவன், ஒன்றிய செயலர் எக்கூர் செல்வம், நகரச் செயலர் பாபுசிவக்குமார், மருத்துவரணி டாக்டர் மாலதிநாராயணசாமி, மத்தூர் ஒன்றிய செயலர், மூன்றம்பட்டி குமரேசன், மாரம்பட்டி ஜீவானந்தம் உள்ளிட்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட திமுக-வினர் சாமல்பட்டி ரயில் நிலையத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  போராட்டத்தில் பீட்டா அமைப்பை வெளியேற்றி தடை செய்ய வேண்டும் எனவும், ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற வேண்டும் எனவும் முழக்கங்கள் எழுப்பினர்.
   கூடுதல் கண்காணிப்பாளர் தமிழரசி, நில அபகரிப்பு டி.எஸ்.பி. ரவிகுமார், ஊத்தங்கரை டி.எஸ்.பி. அர்சுனன், காவல் ஆய்வாளர்கள் கனகேசன், லோகநாதன், ஆண்டவர் ஆகியோர் தலைமையிலான 60-க்கும் மேற்பட்ட போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai