சுடச்சுட

    

    ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்டுள்ள தடையை முழுமையாக நீக்க வலியுறுத்தி, தருமபுரி இலக்கியம்பட்டி ஏரி பகுதி, பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரே 5-ஆம் நாளாக ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
    இலக்கியம்பட்டி ஏரியில் தருமபுரி மக்கள் மன்றத்தினரின் ஏற்பாட்டில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இரவு, பகலாக அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தை நடத்தி வரும் இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமையும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
    கிருஷ்ணகிரி
     ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க நிரந்தர சட்டம் தேவை எனக் கூறி, கிருஷ்ணகிரி, ஒசூர், அரூர், ஊத்தங்கரை பகுதிகளில் 5-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் போராட்டம் தொடர்ந்தது.
    கிருஷ்ணகிரி புறநகர்ப் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரே சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள், முதியோர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    போராட்டத்தில் ஈடுபட்டோர் பீட்டா அமைப்பைத் தடை செய்ய கோரியும், ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
    இதேபோல, ஒசூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, பர்கூர், காவேரிப்பட்டணம், சந்தூர் வேப்பனஅள்ளி உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
    ஊத்தங்கரை
    ஊத்தங்கரையில் நடைபெற்ற போராட்டத்தில் பீட்டாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய தன்னார்வலர்கள், ஜல்லிக்கட்டு தடையை நீக்க நிரந்தர சட்டம் தேவை என வலியுறுத்தினர்.
    போராட்டத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், சேவல் சண்டை, கோலாட்டம் போன்ற விளையாட்டுகள் நடைபெற்றன. மேலும், தனியார் குளிர்பானக் கடை மற்றும் ஹோட்டலில் வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்க எதிர்ப்புத் தெரிவித்து இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சாமல்பட்டி பாவக்கல் குன்னத்தூர் அனுமன்தீர்த்தம் சிங்காரப்பேட்டை காரப்பட்டு போன்ற பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    அரூர்
    அரூர் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் தாற்காலிக பந்தல் அமைத்து இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    இதேபோல அ.பள்ளிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, வெங்கடசமுத்திரம், கடத்தூர், மொரப்பூர், கம்பைநல்லூர், கோபிநாதம்பட்டி கூட்டுசாலை, நரிப்பள்ளி, தீர்த்தமலை, பொய்யப்பட்டி பல்வேறு இடங்களிலும் இளைஞர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஒசூர்
    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஒசூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் அடியில் 5-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் போராட்டம் நடைபெற்றது.
    கடும் பனியையும் பொருள்படுத்தாமல் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஒசூர் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai