சுடச்சுட

    

    இளைஞர்கள் மீதான நடவடிக்கையைக் கண்டித்து மக்கள் நலக் கூட்டணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    By தருமபுரி/அரூர்,  |   Published on : 24th January 2017 09:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜல்லிக்கட்டு கோரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் மீது காவல் துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கையைக் கண்டித்து தருமபுரியில் மக்கள் நலக் கூட்டணிக் கட்சியினர் திங்கள்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
     ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க நிரந்தரமான ஏற்பாட்டைச் செய்ய வேண்டும் எனக் கோரி மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்களை இளைஞர்கள் நடத்தி வருகின்றனர்.
     சென்னை, மதுரை போன்ற இடங்களில் இந்தப் போராட்டக் குழுவினர் மீது திங்கள்கிழமை அதிகாலை முதல் கடுமையான நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொண்டனர்.
     இதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் உடனடியாக ஆர்ப்பாட்டம் நடத்த மக்கள் நலக் கூட்டணி முடிவு செய்தது. இதன்படி, தருமபுரியில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலர் பொ.மு. நந்தன் தலைமை வகித்தார்.
     மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம். மாரிமுத்து, மாவட்டச் செயலர் ஏ. குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ். தேவராசன், மாவட்டத் துணைச் செயலர் ஜே. பிரதாபன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் (மேற்கு) த. ஜெயந்தி உள்ளிட்டோர் பேசினர்.
     அரூரில்...
     அரூரில் மக்கள் நலக் கூட்டணி கட்சியினர் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     சென்னை மெரீனா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதைக் கண்டித்து அரூர் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் மக்கள் நலக் கூட்டணியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     இளைஞர்கள் மீது தடியடி நடத்திய போலீஸார் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும், பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் சாலை மறியல் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
     இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலர் கி.ஜானகிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலர் ஆர்.நடராஜன், இந்திய கம்யூ.கட்சியின் மாவட்ட துணைச் செயலர் கா.சி.தமிழ்க்குமரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai