சுடச்சுட

  

  ஜல்லிக்கட்டு கோரும் போராட்டம்: தருமபுரியில் 93 பேர் கைது; 14 இடங்களிலும் போராட்டம் வாபஸ்

  By தருமபுரி,  |   Published on : 24th January 2017 09:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜல்லிக்கட்டு கோரி தருமபுரியில் 14 இடங்களில் நடைபெற்ற போராட்டங்களும் திங்கள்கிழமை முற்பகலில் திரும்பப் பெறப்பட்டன. இலக்கியம்பட்டி ஏரியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த 4 பெண்கள் உள்பட 93 பேர் கைது செய்யப்பட்டனர்.
   ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக இளைஞர்கள், மாணவர்கள் தீவிரமாக போராட்டக் களத்தில் குதித்தனர். தருமபுரி மாவட்டத்தில் இந்தப் போராட்டம் திங்கள்கிழமையோடு 6ஆவது நாளாக நடைபெற்றது.
   குறிப்பாக, இலக்கியம்பட்டி ஏரியில் தருமபுரி மக்கள் மன்றத்தின் ஏற்பாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
   ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசரச் சட்டம் மாநில அரசால் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் நடக்குமா, விலக்கிக் கொள்ளப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. தடையேற்படாத வகையிலான சட்டமாக இருக்குமா என்ற கேள்வி இளைஞர்களிடம் எழுந்தது.
   இந்த நிலையில், திங்கள்கிழமை காலை இலக்கியம்பட்டி ஏரிப் பகுதிக்கு துணைக் காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம், வட்டாட்சியர் சரவணன், காவல் ஆய்வாளர் த. காந்தி உள்ளிட்டோர் வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
   நீண்டநேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அறவழியில் இருந்தபோதும் கைது செய்வது தவிர்க்க இயலாதது என போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து, போராட்டக் குழுவினர் அனைவரும் தாங்களாகவே காவல் துறை வாகனங்களில் ஏறினர்.
   இதைத் தொடர்ந்து 4 பெண்கள் உள்பட 93 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
   இதேபோல, பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே நடைபெற்றுவந்த போராட்டக்காரர்களிடமும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தைத் திரும்பப் பெறச் செய்தனர்.
   தருமபுரி அரசுக் கலைக் கல்லூரிக்கு முன்பாக இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலர் எஸ். இளமதி தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன், கோட்டாட்சியர் ராமமூர்த்தி, துணைக் காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
   சுமார் ஒன்றரை மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு மாணவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்து கலைந்து சென்றனர்.
   இதேபோல, செட்டிக்கரை அரசுப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் நடைபெற்ற போராட்டங்கள் திங்கள்கிழமை முற்பகலுக்குள் விலக்கிக் கொள்ளச் செய்யப்பட்டன.
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai