சுடச்சுட

    

    வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பருத்தி!

    By தருமபுரி,  |   Published on : 25th January 2017 02:50 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    paruthi

    தருமபுரி மாவட்டத்தின் பிரதான வேளாண் உற்பத்தி வகைகளில் 4-ஆம் இடத்தைப் பெற்றிருக்கும் பருத்தி சாகுபடி, நிகழாண்டு வறட்சியால் கடுமையான பாதிப்பைக் கண்டிருக்கிறது.
     விவசாயமே மையத் தொழிலான தருமபுரி மாவட்டத்தில் பரவலாக, 8,500 ஹெக்டேர் பரப்பளவில் நிகழாண்டு பருத்தி விதைக்கப்பட்டது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே நமது நிலங்களை ஆக்கிரமித்துவிட்ட பிடி ரக பருத்தி விதை வகைகளில் வரலட்சுமி, பன்னி போன்ற ரகங்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விதைக்கப்பட்டன.
     பிடி ரகங்களுக்கான இயல்பே அதிக தண்ணீர் வசதி கொண்ட நிலங்களில் மட்டுமே நல்ல விளைச்சலைத் தரும். ஏற்கெனவே தண்ணீர் வசதி குறைந்த மேட்டுப்பாங்கான நில அமைப்பைக் கொண்ட தருமபுரி மாவட்டத்துக்கு கூடுதலாக இந்த முறை வறட்சியும் கடுமையாகத் தாக்கியுள்ளது.
     இந்த நிலையில், பருத்தி சாகுபடி செய்த இடங்களில் அறுவடை கடந்த 15 நாள்களாக நடைபெற்று வருகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட பருத்திச் செடிகள் வழக்கமான விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கைக் கூடத் தரவில்லை என்கிறார் கம்பைநல்லூரை அடுத்த கடம்பரஅள்ளியைச் சேர்ந்த விவசாயி துரை.
     தனது 3 ஏக்கர் நிலத்தில் வரலட்சுமி வகை பருத்தியை சாகுபடி செய்துள்ள அவர், தற்போது அறுவடைக் கூலிக்குக் கூட விளைச்சல் கிட்டவில்லை என வருத்தம் தெரிவிக்கிறார்.
     மாவட்டம் முழுவதுமே இதே போன்ற நிலை இருப்பதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நாட்டுப் பருத்தி ரகங்கள் ஏக்கருக்கு ஒரு குவிண்டால் விளைச்சல் தரும் என்றால், பிடி ரக பருத்திச் செடிகள் 8 குவிண்டால் வரை விளைச்சல் தரக்கூடியவை. ஆனால், இப்போதுள்ள வறட்சி சூழலில் பிடி ரக பருத்தி ஏக்கருக்கு ஒரு குவிண்டால் கிடைத்தாலே அதிசயம் என்கின்றனர் விவசாய சங்கத்தினர்.
     வறட்சி பாதிப்பு குறித்த கணக்கெடுப்பில் பருத்தி கணிசமான இடத்தைப் பெற்றிருப்பதாகவும், மாநில அரசுக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டு இழப்பீட்டைப் பெற்றுத் தரவுள்ளதாகவும் வேளாண் அதிகாரிகள் உறுதியளிக்கின்றனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai