சுடச்சுட

  

  வறட்சி பாதிப்பு: தருமபுரி, கிருஷ்ணகிரியில் மத்தியக் குழு ஆய்வு

  By தருமபுரி / கிருஷ்ணகிரி,  |   Published on : 25th January 2017 09:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தருபுரி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய வறட்சி ஆய்வுக் குழு செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டது.
   தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்துக்குள்பட்ட சாமாண்டஅள்ளி கிராமத்தில் கரும்பு தோட்டம், எலவடை கிராமத்தில் பருத்தி தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
   மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் தலைமையில், வேளாண் ஆராய்ச்சி அலுவலர் நிதி ஆயோக் முனைவர் பி. கணேஷ்ராம், இந்திய உணவுக் கழகத்தின் உதவிப் பொதுமேலாளர் ரத்னபிரகாஷ், மத்திய மீன்வளத் துறை ஆணையர் முனைவர் பால்பாண்டியன், மாநில அரசின் பிரதிநிதியாக ஆணையர் முனைவர் சி.என். மகேஸ்வரன் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
   பயிர் சாகுபடி செலவினங்கள் மற்றும் பாதிப்பு குறித்து விவசாயிகளுடன் இவர்கள் கலந்துரையாடினர். கரும்பு பதிவு செய்யப்பட்ட விவரம் மற்றும் அரைவையில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் குறித்து சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகிகளிடம் வறட்சிக் குழுவினர் கேட்டறிந்தனர்.
   மொரப்பூர் பயணியர் விடுதியில் மாவட்டத்தின் வறட்சி பாதிப்பு குறித்த விடியோ காட்சி இக்குழுவினருக்கு திரையிடப்பட்டது.
   ஆய்வின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப. கங்காதர், மாவட்ட வருவாய் அலுவலர் அ. சங்கர், சிப்காட் நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் பஷீர், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் துர்க்காமூர்த்தி, அரூர் கூட்டுறவு ஆலையின் மேலாண்மை இயக்குநர் கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆர். சுசீலா, வேளாண் இணை இயக்குநர் சேனாபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.
   கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சராசரியாக 830 மி.மீ. மழை பெய்யும். ஆனால், நிகழாண்டில் 590 மி.மீ. மழையே பெய்துள்ளது. இது 30 சதவீதம் குறைவாகும். மேலும், மாவட்டத்தில் 1,09,065 ஹெக்டேர் பரப்பளவில் வேளாண் சாகுபடி செய்யப்பட்டது. இதில் 27,452 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டன. துவரை, ராகி, பயறு, கொள்ளு, நிலக்கடலை, பருத்தி போன்ற பயிர்களைச் சாகுபடி செய்த 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கால்நடைகளுக்கான 3,000 டன் தீவனம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கிருஷ்ணகிரி அணை பாசனப் பகுதியில் விளைந்த வைக்கோல்களை பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கவும், வன விலங்குகளின் தாகம் தீர்க்கும் வகையில் வனப் பகுதியில் தண்ணீர் தொட்டிகளை அமைத்து நீர் நிரப்பப்படுகின்றன. இம் மாவட்டத்தில் மழை குறைந்துள்ளதால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
   இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், ஊத்தங்கரை ஆகிய வட்டங்களில் மத்தியக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். மத்திய வேளாண் ஆராய்ச்சி அலுவலர் பி.கணேஷ்குமார், மத்திய நீர்வள ஆதார அமைப்பின் அலுவலர் ரத்தினபிரசாத், மத்திய கால்நடைப் பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீன் வளத் துறை அலுவலர் பால் பாண்டியன் ஆகியோர் அடங்கிய மத்தியக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மாநில சமூகப் பாதுகாப்புத் திட்ட ஆணையர் சி.என்.மகேஷ்வரன், மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.மகேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
   மத்தியக் குழுவிடம் வறட்சியால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என ஆட்சியர் சி.கதிரவன் வலியுறுத்தினர். மேலும், பாதிக்ப்பட்ட விவசாயிகளைச் சந்தித்த மத்தியக் குழுவினர், பயிர்க் காப்பீடு, கூட்டுறவு வங்கியில் பெற்றுள்ள பயிர்க் கடன்கள் குறித்தும் கேட்டறிந்தனர்.
   
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai