சுடச்சுட

  

  'வறட்சி பாதிப்பு குறித்த ஆய்வு வெளிப்படையாக நடத்த வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
   தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை ஆட்சியர் கே.விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது.
   இக்கூட்டத்தில், பென்னாகரத்தைச் சேர்ந்த சிவலிங்கம் பேசியது: தருமபுரி மாவட்டத்தில் சாமை, திணை, வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் 80 சதவீதம் பயிரிடப்படுகின்றன. இந்த பயிர்கள், கடந்த ஆண்டு வறட்சியின் காரணமாக கருகியது. இதுகுறித்து முறையாக கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட சிறுதானிய விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும் என்றார்.
   உழவர் பேரியக்க மாநிலத் தலைவர் இல.வேலுச்சாமி: வறட்சி பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வந்த மத்திய, மாநிலக் குழுவினரின் வருகை குறித்து முறையாக தகவல் அளிக்கப்படவில்லை. இதனால், விவசாயிகள் தங்களது குறைகளை அக் குழுவினரிடம் தெரிவிக்க முடியவில்லை என்றார்.
   தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் கே.என்.மல்லையன்: தருமபுரி மாவட்டத்தில் வறட்சியால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
   தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் ஜெ.பிரதாபன்: மானாவரி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.3,000 இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இது போதுமானதாக இல்லை. எனவே, ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாயத் தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பத்துக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். நாட்டு மாடுகள் வளர்க்க தேசிய வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும் என்றார்.
   இதனைத் தொடர்ந்து, ஆட்சியர் கே.விவேகானந்தன் பேசியது: தருமபுரி மாவட்டத்தில், 100 சதவீதம் வறட்சி பாதிப்பு தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தப்படும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்திலும் விவசாயிகள் தங்களது கருத்துகளை எடுத்துரைக்கலாம். மேலும், கோட்ட அளவில் இரண்டாவது வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் கூட்டத்தில், விவசாயிகளின் பயிர்க் கடன், பால் பணம் உள்ளிட்ட கோரிக்கைகளை கூட்டுறவு துறையினர் நிவர்த்தி செய்வர் என்றார்.
   கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர், கோட்டாட்சியர்கள் ராமமூர்த்தி, கவிதா, மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) பஷீர், சர்க்கரை ஆலை தனி அலுவலர்கள் துர்கா மூர்த்தி (பாலக்கோடு), கவிதா (பாப்பிரெட்டிப்பட்டி), முன்னோடி வங்கி மேலாளர் முத்தரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai