Enable Javscript for better performance
ரூ.1 கோடியில் கட்டப்பட்ட மாற்றுப் பரிகார குறைதீர்வு மையம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    ரூ.1 கோடியில் கட்டப்பட்ட மாற்றுப் பரிகார குறைதீர்வு மையம் திறப்பு

    By தருமபுரி,  |   Published on : 31st January 2017 09:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டம், தடங்கம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்பட்டு வரும் இடத்தில், ரூ. 1 கோடியில் கட்டப்பட்ட மாற்றுப் பரிகார குறைதீர்வு மையத்தை தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியுமான ஹுலுவாடி ஜி. ரமேஷ் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
     தருமபுரி மாவட்டம், தடங்கம் அருகே சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
     இந்த வளாகத்தில், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டில் செயல்படும் மாற்றுப் பரிகார குறைதீர்வு மையத்தின் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
     சுமார் 440 சதுரமீட்டர் பரப்பளவில் ரூ. 1 கோடி மதிப்பில் இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகம், சமரச மையம், மக்கள் நீதிமன்றம், செயலர் அறை, தலைவர் அறை மற்றும் கழிப்பறைகள் ஆகியவற்றுடன் வரவேற்பு அறையும் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையத்தின் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியுமான ஹுலுவாடி ஜி. ரமேஷ் இம்மையத்தைத் திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி வைத்தார்.
     தொடர்ந்து கல்வெட்டுத் திறப்பு நிகழ்ச்சி தருமபுரி நகரிலுள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நீதிபதி ரமேஷ் பேசியது:
     தர்மத்தின் நகரான தருமபுரியில் மாற்றுப் பரிகாôர குறைதீர்வு மையம் தொடங்கப்படுகிறது. தருமபுரி மாவட்ட மக்களுக்கு இந்த மையத்தின் மூலம் விரைவான நீதி கிடைக்கும் என நம்புகிறேன்.
     காவிரியாற்றின் மாநில நுழைவுப் பகுதியாக இருந்தபோதும் தருமபுரியில் விவசாயப் பயன்கள் போதுமானதாக இல்லை. நீர்நிலைகளை சீர்படுத்தி, வனப்பரப்பை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார் ரமேஷ்.
     சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். விமலா பேசியது:
     தனக்குக் கிடைத்த நெல்லிக்கனியை அவ்வைக்கு வழங்கிய தருமபுரியில் இந்த மையம் சிறப்பாக செயல்படாமல் வேறு எங்கே சிறப்பாக செயல்பட்டுவிடப் போகிறது? சமூகப் பொருளாதார நிலைகளில் பின்தங்கிய மக்களுக்கான பயனுள்ள மையமாக இது விளங்கும் என்றார் விமலா.
     மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப. கங்காதர், வழக்குரைஞர் சங்கத் தலைவர் கே. அப்புனுகவுண்டர், செயலர் என். சிவக்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ஆர். ராமசுவாமி கட்டுமான அறிக்கை வாசித்தார்.
     நிகழ்ச்சியில், மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் செயலர் ஏ. நிசார் அகமது உள்ளிட்ட தருமபுரியைச் சேர்ந்த நீதிபதிகள், வழக்குரைஞர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். முன்னதாக மாவட்ட முதன்மை நீதிபதி எஸ். சுபாதேவி வரவேற்றார். முடிவில் வட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் சார்பு நீதிபதியுமான எஸ். சண்முகவேல் நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai