முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவை அடுத்து தருமபுரி நகரில் மாலை 6 மணிக்குமேல் அனைத்து உள்ளூர் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன.
பெங்களூருவில் இருந்து தருமபுரி வழியாக சேலம் செல்லும் பேருந்துகளும், சேலத்திலிருந்து பெங்களூரு செல்லும் பேருந்துகளும் மட்டுமே இயங்கின. மற்றபடி, தருமபுரியிலிருந்து புறப்படும் அனைத்துப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. பெரும்பாலான அரசுப் பேருந்துகள் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் நி றுத்தப்பட்டன.
தனியார் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் கிருஷ்ணகிரி வரையிலும் கூடுதல் கட்டணத்தில் ஆட்டோக்களை இயக்கத் தொடங்கினர். பேருந்து நிலையத்துக்குள் இருந்த கடைகள் மட்டும் மாலையில் அடைக்கப்பட்டன. மற்றபடி நகரின் பல பகுதிகளில் வழக்கமான தள்ளுவண்டிக் கடைகள் இயங்கின.
நகரின் பல பகுதிகளில் திமுகவினர் ஆங்காங்கே கருணாநிதியின் படத்தை வைத்து மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.