நூல்கள் மனதைத் தூய்மைப்படுத்துகின்றன என்றார் சொற்பொழிவாளர் பர்வீன் சுல்தானா.
தருமபுரி புத்தகத் திருவிழாவின் நான்காம் நிகழ்ச்சியையொட்டி திங்கள் நடைபெற்ற கூட்டத்தில், 'மானுடம் வெல்லும்" என்கிற தலைப்பில் அவர் மேலும் பேசியது: பெண்ணின் நல்ல சிந்தனையை இந்த உலகுக்கு அளிக்க வேண்டும் என்பதால், ஒளவை மூதாட்டிக்கு நெல்லிக்கனி வழங்கியது தருமபுரி மண். தற்போதைய சூழலில், நூல்களை வாசிப்பவர்களையும், நல்ல உரைகளைக் கேட்பவர்களையும் காண்பது அதிசயமாகிவிட்டது. மனிதனின் செவிகளுக்கு நல்ல நூல்கள் நுழைவதால், மனக்கிழியல்கள் தைக்கப்படுகின்றன என்பதால் தான் புத்தகங்களுக்கு நூல்கள் எனப் பெயர் வந்ததாக வலம்புரி ஜான் கூறுவார். நற் சிந்தனை என்பது பணத்தால் வராது. வாசிப்பதால் மட்டுமே வரும். உடலுக்கு உடற்பயிற்சி போல, மனதுக்கு நல்ல பயிற்சி அளிப்பது நூல்கள் வாசிப்பு. எனவே, நூல்களைத் தேடிப் பிடித்து வாங்க வேண்டும். அவற்றை முழுமையாக வாசிக்க வேண்டும். வாசித்து புரிவது தான் வாழ்க்கை. வாசிக்கும் போது காட்சிகள் கண் முன் வருவதால், கற்பனை மேலெழும்புகிறது. சிந்தனை அதிகரிக்கிறது. மானுடத்தை வெல்லுகின்ற சொற்களைத் தருகிறவன், மக்களுக்காக சிந்தித்து எழுதுபவனே எழுத்தாளன். மானுடம் வெல்ல நல்ல நூல்களைத் தேடிப் படிக்க வேண்டும். திரைப்படங்களிலோ, தொலைக்காட்சிகளிலோ நாயகர்கள் இல்லை. மாறாக, நூல்களில்தான் நாயகர்கள் உள்ளனர். எனவே, திரைப்படங்களையும், தொலைக்காட்சிகளையும் கண்டு அரசியல் முடிவு செய்ய வேண்டாம். நாம் வாசிப்பதோடு, குழந்தைகளுக்கு நூல்களை வாசிக்கக் கற்றுத் தர வேண்டும். அதேபோல, பெண்கள் அதிகளவில் நூல்களை வாசிக்க வேண்டும. இதனால் நல்ல சமுதாயம் மலரும் என்றார்.
மகத்தான கண்டுபிடிப்பு புத்தகம்...
இந்த கூட்டத்தில், "வாசிப்பை நேசிப்போம்" என்கிற தலைப்பில் முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் மு.சம்பத் பேசியது: மனித வரலாற்றின் மகத்தான கண்டுபிடிப்பு நெருப்பு, சக்கரம் என்று கூறுவர். இவற்றில் நான் அறிந்த வரையில் புத்தகம் மட்டுமே மகத்தானது. இந்திய வரலாறு மட்டுமல்ல, உலக வரலாற்றில் மகத்தான மனிதர்களுக்கு பின்னால் நூல்கள் வாசிப்பு வழக்கம் இருந்துள்ளது. பகத் சிங், நெல்சன் மண்டேலா என பல தலைவர்களை உதாரணமாகக் கூறலாம். ஓலைச்சுவடிகள் கூட, ஒதுவதை குறித்து சொல்லியிருக்கிறது. அதேபோல, திறக்குறளும் கல்வியைக் குறித்தும் கல்லாமை குறித்தும் அதிகாரத்தை படைத்திருக்கிறது. எனவே, வாழ்க்கையின் ஓர் அங்கமாக நூல்கள் இருக்க வேண்டும். நமது குழந்தைகளுக்கு படிப்பை சுமையாகச் சுட்டிக்காட்டாமல், சுகமானதாக அவற்றை சுட்டிக்காட்ட வேண்டும் என்றார்.
செந்தில் கல்விக் குழுமத் தலைவர் செந்தில் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், தகடூர் புத்தகப் பேரவைத் தலைவர் மருத்துவர் இரா.செந்தில், ஒருங்கிணைப்பாளர் இரா.சிசுபாலன், பேராசிரியர்கள் இ.பி.பெருமாள், தமிழரசன் உள்ளிட்டோர் பேசினர்.