தகடூர் புத்தகப் பேரவையும், பாரதி புத்தகாலயமும் இணைந்து நடத்தும் தருமபுரி புத்தகத் திருவிழாவின் 4ஆம் நாளான திங்கள்கிழமை பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் குவிந்தனர்.
பல்வேறு அரசுப் பள்ளிகளின் மாணவ, மாணவிகளுடன், தனியார் பள்ளிகளின் மாணவ, மாணவிகளும் ஏராளமானோர் வந்திருந்தனர். ஒவ்வொரு பள்ளியாக வரிசையாக இவர்கள் புத்தக அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
அரங்குகளை பொறுமையாகப் பார்வையிட்ட மாணவ, மாணவிகள் தங்களுக்கான புத்தகங்களை ஆர்வமாகத் தேடி வாங்கியது பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.
"ஒரு மாணவனுக்கு ஒரு நூல்' என்ற திட்டத்தை திருவிழா தொடங்கும்போதே முன்வைத்தோம். இதற்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் அனுமதி பெற்று, திங்கள் முதல் ஒவ்வொரு அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளும் அழைத்து வரப்படவுள்ளனர்.
தனியார் பள்ளிகளைப் பொருத்தவரை, அவர்கள் தங்களது மாணவர்களை அழைத்து வரும் நாளுக்கு அடுத்த நாள், பக்கத்திலுள்ள அரசுப் பள்ளி மாணவர்களை அழைத்து வருவதற்கு தங்களது வாகனங்களை அனுப்பி உதவிட உறுதியளித்தனர். இதுவே எங்கள் இலக்கை நிறைவேற்ற உறுதியளிக்கிறது' என்றார் புத்தகத் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளரும், தகடூர் புத்தகப் பேரவையின் தலைவருமான இரா. சிசுபாலன்.
பரம்வீர் பள்ளியில் இருந்து வந்திருந்த 12ஆம் வகுப்பு மாணவி எஸ். கவிபிரியா, ரூ. 280 மதிப்புள்ள "அறிவியலில் பெண்கள்' என்ற நூலைத் தேர்வு செய்து வாங்கினார்.
கடந்த எஸ்எஸ்எல்சி தேர்வில் 474 மதிப்பெண்களை எடுத்த இவர், அரசுப் பள்ளி ஆசிரியரின் மகள். பெண்களின் சாதனையைத் தெரிந்து கொள்ள ஆர்வமுற்று இந்த நூலைத் தேர்வு செய்ததாகக் கூறினார்.
கோபிநாதம்பட்டி ஐஎம்ஸ் பள்ளி மாணவிகள் எம். பிரியதர்ஷினி, கே. ஓவியா, ஜி. தேவதர்ஷினி ஆகியோர் சேர்ந்து ரூ. 310 மதிப்புள்ள "ஆயுஷ் குழந்தைகள்' என்ற நூலைத் தேர்வு செய்தனர்.
குழந்தை வளர்ப்பு, படிப்பு குறித்த தகவல்கள் இருந்ததால்- தொகை அதிகமாக இருந்தாலும் மூவர் சேர்ந்து- நூலை வாங்கிவிட்டதாக அவர்கள் கூறினர்.
இதுபோல, பள்ளி மாணவ, மாணவிகள் பொதுவான எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் உடைக்கும் வகையில் நூல்களை வாங்கிச் சென்றது பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.