Enable Javscript for better performance
ஒகேனக்கல் வாகனங்களுக்கு இரு இடங்களில் கட்டணம் வசூல்!ஆர்.ராதாகிருஷ்ணன்- Dinamani

சுடச்சுட

    

    ஒகேனக்கல் வாகனங்களுக்கு இரு இடங்களில் கட்டணம் வசூல்!ஆர்.ராதாகிருஷ்ணன்

    By DIN  |   Published on : 09th February 2018 02:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒகேனக்கல்லுக்குச் செல்லும் வாகனங்களுக்கு இரண்டு இடங்களில் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே வனப் பகுதியில் அமைந்துள்ளது ஒகேனக்கல் அருவி. கர்நாடக மாநிலத்திலிருந்து, தமிழகத்தில் நுழைந்து ஒகேனக்கல்லில் அருவியாக கொட்டுகிறது காவிரி. தென்னிந்தியாவின் நயாகரா என்றழைக்கப்படும் இந்த அருவி மிக முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது.
    இங்குள்ள அருவியில் குளிப்பதோடு, ஆற்றில் பரிசல் சவாரியும் செய்ய முடியும் என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், கர்நாடகத்தில் பெங்களூரு மற்றும் ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்தும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
    அவ்வாறு சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வரும்போது, பென்னாகரத்தை அடுத்த வனப்பகுதி சோதனைச் சாவடி அருகே கூத்தப்பாடி ஊராட்சி நிர்வாகம் சார்பில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த இடத்தில் கட்டணத்தைச் செலுத்திவிட்டு ஒகேனக்கல்லில் நுழையும் போது, மீண்டும், வாகனங்கள் நிறுத்தப்பட்டு அங்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
    இதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி, நாட்ரம்பாளையத்தைக் கடந்து ஊட்டமலை வழியாக ஒகேனக்கல்லுக்கு வருவோரிடம் ஊட்டமலையில் ஓர் இடத்திலும், மீண்டும் ஒகேனக்கல் பேருந்து நிலையம் அருகே ஓர் இடத்திலும் என இரண்டு இடங்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
    இது தொடர்பாக கட்டணம் வசூலிப்போரிடம் சுற்றுலாப் பயணிகள் விளக்கம் கேட்கும்போது, உரிய விளக்கம் அளிப்பதில்லை எனவும், ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒகேனக்கல்லில், இரண்டு இடங்களில் கட்டணம் வசூலிப்பதைத் தவிர்த்து, ஏதாவது ஓரிடத்தில் மட்டும் கட்டணம் பெற மாவட்ட நிர்வாகம் முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
    கூடுதல் கட்டணம்: ஒகேனக்கல்லில் இரண்டு இடங்களில் வசூலிக்கும் கட்டணம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் விதித்துள்ள கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. கார், வேன், பேருந்துகள் என அனைத்து வாகனங்களுக்கும் ஏலத்தின்போது விதிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாகவே வசூலிக்கப்படுகிறது.
    வாகனம் நிறுத்த தனி இடம் இல்லை: ஒகேனக்கல் அருவிக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கிலும், சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை, திருவிழாக் காலங்களில் ஆயிரக்கணக்கிலும் வாகனங்கள் வருகின்றன. ஊராட்சி நிர்வாகம் சார்பில் இரு இடங்களில் கட்டணம் வசூலித்தாலும், வாகனங்கள் நிறுத்துவதற்கென தனி இடம் இல்லை. இதனால் வரும் வாகனங்கள் பேருந்து நிலையத்திலும், சாலையின் ஓரத்திலும், வனப் பகுதியிலும் நிறுத்தப்படுகின்றன. எனவே, சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்துவதற்கென தனி இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் விமலன் கூறியது: ஒகேனக்கல்லில் வனப்பகுதி சோதனைச் சாவடி அருகே கூத்தப்பாடி ஊராட்சி நிர்வாகம் சார்பில் வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்படுவது நுழைவுக் கட்டணமாகும். அதேபோல, ஒகேனக்கல் பேருந்து நிலையம் அருகே வசூலிக்கப்படுவது வாகன நிறுத்தக் கட்டணமாகும். ஒகேனக்கல்லுக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக 5 ஏக்கர் பரப்பளவு இடம் ஒதுக்கித் தர வனத் துறையிடம் கோரப்பட்டுள்ளது. அந்த இடம் பெறப்பட்ட பின், வாகனங்கள் நிறுத்துவற்கு தனி இடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    அதேபோல, ஊட்டமலை சாலையில் கட்டண வசூல் மற்றும் கூடுதல் கட்டணம் வசூல் ஆகியவை குறித்து விசாரணை மேற்கொண்டு, அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai