Enable Javscript for better performance
பாலக்கோடு அரசுக் கல்லூரிக்கு விரைவில் விடுதிக் கட்டடம்: அமைச்சர் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    பாலக்கோடு அரசுக் கல்லூரிக்கு விரைவில் விடுதிக் கட்டடம்: அமைச்சர் தகவல்

    By DIN  |   Published on : 09th February 2018 02:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் நிகழாண்டில் தொடங்கப்பட்ட புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியருக்கு விரைவில் புதிய விடுதிக் கட்டடம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
    இங்கு தாற்காலிகமாக தொடங்கப்பட்டுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதியை வியாழக்கிழமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த அவர் மேலும் பேசியது:
    பாலக்கோட்டில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி நிகழாண்டில் தொடங்கப்பட்டு, தற்போது 8 பாடப் பிரிவுகளில் 518 பேர் படித்து வருகின்றனர்.
    இக்கல்லூரிக்கு புதிய கட்டடங்களைக் கட்ட பாலக்கோடு சர்க்கரை ஆலைக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.8 கோடியில் விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவுள்ளன.
    ஒரே ஆண்டில் கல்லூரியைத் தொடங்கி, சொந்தக் கட்டடங்களுக்காக நிலம் பெறப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமானப் பணிகளும் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
    இந்த நிலையில், நிகழாண்டில் கல்லூரி மாணவர்களுக்காக 5 விடுதிகள் தமிழ்நாட்டில் கட்டப்படவுள்ளன. இதில் தருமபுரி பாலக்கோடும் ஒன்று. இதற்காக ரூ.33.59 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 100 மாணவர்கள் தங்குவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    புதிய விடுதிக்கான இடம் விரைவில் தேர்வு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கும். இந்த நல்ல வாய்ப்பை பாலக்கோடு பகுதி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அன்பழகன்.
    விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தலைமை வகித்தார். வருவாய் கோட்டாட்சியர் ராமமூர்த்தி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர்பாஷா, பாலக்கோடு சர்க்கரை ஆலைத் தலைவர் கே.வி.அரங்கநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமஜெயம், தனபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai