பாலிதீன் பைகளைத் தவிர்க்க அரசுப் பணியாளர்களுக்கு "டிபன் கேரியர்' வழங்கல்: மாநிலத்தின் முன்னோடி திட்டம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பணியாற்றுவோர் மதிய உணவுக்கு கடைகளில் சாப்பாடு வாங்கும்போது, பாலிதீன் பைகளைத்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பணியாற்றுவோர் மதிய உணவுக்கு கடைகளில் சாப்பாடு வாங்கும்போது, பாலிதீன் பைகளைத் தவிர்க்கும் வகையில், "டிபன் கேரியர்' வழங்கும் புதிய திட்டத்தை உணவுப் பாதுகாப்பு துறை செய்துள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள அனைத்துத் துறை அலுவலகங்களில் சுமார் 200 பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் மதிய உணவுக்காக அருகிலுள்ள உணவகங்களை நாடும்போது, இயல்பாகவே பாலிதீன் பைகளில் சாதம், குழம்பு, காய்கள் உள்ளிட்ட அனைத்தும் கட்டிக் கொடுக்கப்படுகின்றன.
"பாலிதீன் இல்லாத தமிழ்நாடு' என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி,  பல வகைகளில் பாலிதீன் பைகளைத் தவிர்க்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு மாற்றாக, தருமபுரி மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை "டிபன் கேரியர்' திட்டத்தை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் "டிபன் கேரியர்கள்' வைக்கப்பட்டிருக்கும்.  அரசுப் பணியாளர்கள் தங்கள் தேவைக்கு ஒரு டிபன் கேரியரை எடுத்துச் சென்று, கடைகளிலிருந்து உணவை வாங்கி சாப்பிட்ட பிறகு, அதனைக் கழுவி மீண்டும் கொண்டு வந்து கொடுத்துவிடலாம். இதற்கு கட்டணம் எதுவுமில்லை என்றாலும்,  வைப்புத் தொகையாக ரூ.100 மட்டும் வாங்கப்பட்டு,  டிபன் கேரியரைத் திரும்ப ஒப்படைக்கும்போது, அந்தத் தொகை திரும்ப வழங்கப்படும்.
"நன்கொடையாளர்களின் உதவியுடன் தற்காலிகமாக 15 டிபன் கேரியர்கள் வாங்கி வைக்கப்பட்டுள்ளன.  மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்பு இத் திட்டத்தில் மிக முக்கியமானது. நூதனமான இந்த முயற்சி வெற்றி பெற்றால், தினமும் பல நூறு பாலிதீன் பைகளின் பயன்பாடு தவிர்க்கப்படும்' என்கிறார் மாவட்ட  நியமன அலுவலர் (உணவுப் பாதுகாப்பு) டாக்டர் பிருந்தா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com