முழு அடைப்பு -  தருமபுரியில் இயல்புநிலையில் பாதிப்பில்லை: இடதுசாரிகள் மறியல்- திமுக, காங். கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் நாடு தழுவிய அளவில்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் நாடு தழுவிய அளவில் திங்கள்கிழமை அறிவித்த முழு அடைப்புப் போராட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் மக்களின் இயல்புநிலையில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.  கடைகள் திறந்திருந்தன. பேருந்துகள் வழக்கம்போல இயங்கின.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தை அறிவித்தன.  இதில் தருமபுரி மாவட்டத்தில் கடையடைப்பு எதுவும் நடைபெறவில்லை.  நகரில் சில கடைக்காரர்கள் தங்கள் கடைகளை சிறிது நேரம் கழித்துத் திறந்தனர். பேருந்துகள் வழக்கம்போல இயங்கின.  காலையில் மட்டும் ஓரிரு இடங்களில் ஆட்டோக்கள் இயங்கவில்லை.  பிறகு அவையும் இயல்புநிலைக்குத் திரும்பின.
இடதுசாரிகள் மறியல்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்) ஆகிய கட்சிகள் சார்பில் தருமபுரி தலைமை அஞ்சலகம் முன் மறியல் போராட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் ஏ. குமார், இந்திய கம்யூ. மாவட்டச் செயலர் எஸ். தேவராசன், மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பிருந்து ஊர்வலமாகப் புறப்பட்ட இக் குழுவினர்,  தலைமை அஞ்சலகம் முன் மறியலில் ஈடுபட்டனர்.  இதையடுத்து,  85 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திமுக - காங். ஆர்ப்பாட்டம்... தருமபுரி 
நகர கடை வீதியில் உள்ள காமராஜர் சிலை முன் திமுக,  காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
திமுக மாவட்டச் செயலரும் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினருமான தடங்கம் பெ. சுப்பிரமணி,  காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கோவி. சிற்றரசு ஆகியோர் தலைமை வகித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் இதில் கலந்து கொண்டனர்.  மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.  சிறிது நேரத்தில் அவர்கள் கலைந்து சென்றனர்.
கிருஷ்ணகிரியில்... பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல்,  டீசல் விலை உயர்ந்து வருவதைக் கண்டித்து, காங்கிரஸ் சார்பில் அகில இந்திய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் ஆதரவு அளித்தன. 
இத்தகைய நிலையில், கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் புறநகர் பேருந்து நிலையம் அருகே  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் அக.கிருஷ்ணமூர்த்தி, ஏகம்பவாணன், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் ஜேசுதுரைராஜ், நாராயணமூர்த்தி, முன்னாள் நகரத் தலைவர் தளபதி ரகமத்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், கிருஷ்ணகிரியில் ஆட்டோ ஓட்டுநர் பொது நலவாரிய சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தனித்தனியாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றோர் மத்திய அரசைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
பொது வேலைநிறுத்தத்தையொட்டி, மக்கள் கூடும் இடங்களில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். கிருஷ்ணகிரியில் ஆட்டோக்கள், பேருந்துகள் வழக்கம்போல் இயங்கின. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
ஊத்தங்கரையில்... ஊத்தங்கரை, சாமல்பட்டி , காரப்பட்டு, சிங்காரப்பேட்டை, அனுமன்தீர்த்தம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் நடைபெற்ற கடையடைப்பு  போராட்டத்துக்கு  ஆதரவாக அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. 
மேலும்,  இப்பகுதியில் பெரும்பாலான பேருந்துகள்,  ஆட்டோக்கள் ஓடவில்லை. ஒரு சில தனியார் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன. இந்த கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவாக  திமுக, வி.சி.க, பா.ம.க, இடதுசாரி கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர். மேலும் அனைத்து வணிகர் சங்கங்கள், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை மூடி முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் இப்பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது. கடையடைப்பு போராட்டத்தில் காங்கிரஸ் வட்டாரத் தலைவர் ஜெ.எஸ்.ஆறுமுகம், நகரத் தலைவர் விஜயகுமார், திமுக ஒன்றியச் செயலாளர் எக்கூர் செல்வம், நகரச் செயலாளர் பாபுசிவக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அசோகன், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 
சாலை மறியல்
ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி சார்பில் பெட்ரோல்,  டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயர்வைக் கண்டித்து திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 25 பேரை போலீஸார் கைது செய்தனர்.
போராட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். பகுதி செயலாளர் எத்திராஜ்,  பகுதி குழு உறுப்பினர்கள் முத்துக்குமார், பொன்னுசாமி, ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயர்வைக் கண்டித்தும், 100 நாள் வேலைத்திட்டத்தில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்தும்  திருவண்ணாமலை செல்லும் பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சிங்காரப்பேட்டை போலீஸார் கைது செய்து தனியார் திருமணமன்டபத்தில் வைத்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டியில்
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திங்கள்கிழமை நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் காரணமாக பாப்பிரெட்டிப்பட்டி,  மொரப்பூரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
காங்கிரஸ் கட்சி தலைமையில் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இணைந்து நடத்திய இந்த பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து, பாப்பிரெட்டிப்பட்டி,  மொரப்பூரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.  அரூரில் பெரும்பாலான கடைகள் மூடப்படவில்லை. இதேபோல் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கின.
அரூர் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 50 பேரை அரூர் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com