வாழ்க்கைப் பாதைக்கு வழிகாட்டக் கோரும் பார்வையற்ற தம்பதி

கடத்தூரைச் சேர்ந்த பார்வையற்ற தம்பதியினர், தங்களது வாழ்க்கைப் பாதைக்கு வழிகாட்ட அரசின் உதவியைக் கோரி நிற்கின்றனர்.

கடத்தூரைச் சேர்ந்த பார்வையற்ற தம்பதியினர், தங்களது வாழ்க்கைப் பாதைக்கு வழிகாட்ட அரசின் உதவியைக் கோரி நிற்கின்றனர்.
தருமபுரி மாவட்டம், சிந்தல்பாடி அருகே சி.பள்ளிப்பட்டியைச் சேர்ந்த சி.நஞ்சம்மாள் (37), 4 வயது இருக்கும்போதே மஞ்சள் காமாலை நோய்க்கு கண்ணில் மருந்து கொடுத்ததால் இரு கண்களின் பார்வையையும் இழந்தார்.
பார்வையை இழந்தபோதும் மனம் தளராமல் எட்டாம் வகுப்பு வரை பர்கூரில் படித்த இவர்,   தொடர்ந்து படிக்க வீட்டை விட்டு வெளியேறி திருச்சியிலுள்ள ஒரு தொண்டு நிறுவனத்தின் இல்லத்தில் தங்கி, பிளஸ் 2 வரை முடித்திருக்கிறார்.
அதன்பிறகும் அவர் படிப்பதற்கு அங்கே உதவ முன்வந்தும்கூட,   அடுத்தகட்டத்தை நோக்கி யோசித்து திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்.  அதே இல்லத்தில் தங்கி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் (பி.ஏ.) முடித்த முத்துப்பாண்டியனுடன் திருமணம் நடந்து முடிந்தது. பிறகு கோவைக்கு இடம்பெயர்ந்தனர். அங்கே தனியார் பள்ளி மற்றும் மருத்துவமனைகளில் தற்காலிகமாக பணியில் சேர்ந்தார் முத்துப்பாண்டியன். இரு மகன்கள் பிறந்தனர்.
கோவையில் வேலை பறிபோன பிறகு,  சொந்த ஊருக்கே அவர்கள் திரும்பி வந்தனர்.  இவர்களது மூத்த மகன் கனிஷ்கர் (9) தற்போது இலக்கியம்பட்டி கிறிஸ்தவ மிஷன் சேவை நிறுவனத்தால் நடத்தப்படும் இல்லத்தில் தங்கி 6-ஆம் வகுப்பு படிக்கிறார்.  இளைய மகன் நேரு (4) கடத்தூரிலுள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படிக்கிறார். 
மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறப்பட்டு, இருவருக்கும் அரசின் உதவித் தொகையாக தலா மாதம் ரூ.ஆயிரம் கிடைக்கிறது.
அந்தத் தொகை போதுமானதாக இல்லாததாலும்,  உருப்படியான வேலை இல்லாததாலும், வேறு வழியின்றி குழந்தைகளின் எதிர்காலம் கருதி பேருந்து நிலையங்களில் கையேந்தி நிற்கிறார்கள்.
தங்களது வாழ்க்கைப் பாதைக்கு வழிகாட்ட அரசு செய்ய வேண்டியதென விவரிக்கிறார் நஞ்சம்மாள்,  நியாய விலைக் கடையில் கிடைக்கும் அரிசியில் இருந்து கற்களையும், நெல்லையும் பொறுக்கியெடுக்கக் கூட எங்களால் இயலாது.  கடையில்தான் பணம் கொடுத்து அரிசி வாங்கியே ஆக வேண்டும்.  அரசுப் பள்ளிக்கு இரண்டாவது மகனை அனுப்பலாம் என்றால், பள்ளிக்கும் வீட்டுக்கும் அதிக தொலைவு.
இருவருக்கும் 100 சதவீதம் பார்வையற்றதால்,  கையேந்தி நிற்பதைத் தவிர இப்போதைக்கு எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.  எங்களுக்கு ஓர் இலவச வீட்டையும், ஒரு பெட்டிக் கடை நடத்தவும் அரசு உதவினால், எங்கள் குழந்தைகளை நாங்கள் நன்றாக படிக்க வைப்போம் என்கிறார் நஞ்சம்மாள்.
இதுகுறித்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் தொடர்பு கொண்டபோது,  வீடு மற்றும் தொழில் கடன் கண்டிப்பாக தரத் தயாராக உள்ளோம்.  ஆனால், எங்கள் துறைக்கான ஒதுக்கீடும்,  நிதியும் குறைவு. பயனாளிகள் பட்டியல் இருப்பதால், காத்திருக்க வேண்டும் என்கிறார்கள்.
"பிச்சையெடுக்கிறார்கள்' என்றுகூட சொல்ல முடியாத நிலையில்  கையேந்தி நிற்கும் முத்துப்பாண்டியன்- நஞ்சம்மாள் தம்பதிக்கும், அவர்களின் குழந்தைகளின் வாழ்க்கைக்கும் மாவட்ட நிர்வாகம் ஒரு நல் வழியைக் காட்ட வேண்டும்.  உதவிகள் இவர்களுக்கில்லாவிட்டால் வேறு யாருக்கு?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com