தருமபுரி அரசு மருத்துவமனை அமைத்ததில் அன்புமணிக்கு முக்கியப் பங்கு: பா.ம.க.  நிறுவனர் மருத்துவர் எஸ்.ராமதாஸ்

தருமபுரி அரசு மருத்துவமனை அமைத்ததில் அன்புமணிக்கு முக்கியப் பங்கு உண்டு என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் எஸ்.ராமதாஸ் தெரிவித்தார். 

தருமபுரி அரசு மருத்துவமனை அமைத்ததில் அன்புமணிக்கு முக்கியப் பங்கு உண்டு என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் எஸ்.ராமதாஸ் தெரிவித்தார். 
அ.தி.மு.க கூட்டணியின் தருமபுரி மக்களவைத் தொகுதி பா.ம.க . வேட்பாளர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்,  இடைத் தேர்தல்களில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வே.சம்பத்குமார் (அரூர்), ஏ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி) ஆகியோரை ஆதரித்து, தருமபுரி மாவட்டம் அரூர், கம்பைநல்லூர், ஜாலிப்புதூர் ஆகிய இடங்களில் புதன்கிழமை மாலை  நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டங்களில் மருத்துவர் எஸ்.ராமதாஸ் பேசியது : 
  என்னையும், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியையும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்  நாகரிகம் இல்லாமல் தொடர்ந்து பேசி வருகிறார்.  
தமிழகத்தில் 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் 8 தொகுதிகள் வெற்றி பெற்றால்,  அதிமுக தலைமையிலான ஆட்சி தொடர்ந்து நடைபெறும்.  ஆனால்,  இடைத் தேர்தலில் 10 தொகுதிகள் கூடுதலாக, 18 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும்.   மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் யாரும் ஒரு வாக்குக் கூட அளிக்கக் கூடாது.  தமிழகத்தில் இந்த தேர்தலோடு தி.மு.க கட்சியானது ஒரு முடிவுக்கு வந்து விடும். 
இந்தியாவில் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பதவியில் இருக்கும் போது 14 மாநிலங்களில் ஒரே நேரத்தில் கொண்டு வந்தார். அதேபோல்,  தருமபுரியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைவதற்கும் அன்புமணியின் பங்கு மிக முக்கியமானதாகும்.   தற்போது,  அவரது பெரும் முயற்சியால் மொரப்பூர்-தருமபுரி ரயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
பா.ம.க. நிர்வாகிகள்,  பெண்கள் தாங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள பொதுமக்களிடம் நயமாகப் பேசி அதிமுக, பாமக, பாஜக கூட்டணிக்கு வாக்குகளைச் சேகரிக்க வேண்டும். மத்திய,  மாநில அரசுகளின் நலத் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்குகளைச் சேகரிக்க வேண்டும். 
தருமபுரி மாவட்ட மக்களின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடும் கட்சி பா.ம.க . ஆகும்.  எனவே,  வரும் மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில்  அதிமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு  வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்து,   அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார் ராமதாஸ். 
 இந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்,  பா.ம.க மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, மாநில துணைத் தலைவர் ரா.அரசாங்கம்,  உழவர் பேரியக்க மாவட்டச் செயலர் அய்யப்பன்,  பா.ஜ.க மாவட்டத் தலைவர் வரதராஜன்,  தே.மு.தி.க மாவட்ட செயலர் தம்பி ஜெய்சங்கர்,  தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com