சுடச்சுட

  

  தருமபுரி - மொரப்பூர் ரயில்பாதை திட்டம் அரசியலுக்காக கொண்டுவரப்பட்டது: தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமார்

  By DIN  |   Published on : 17th April 2019 02:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  தருமபுரி - மொரப்பூர் ரயில்பாதைத் திட்டத்தை  ஐந்து ஆண்டுகளாக செயல்படுத்தாமல்,  தற்போது கொண்டுவரப்பட்டது தேர்தல் அரசியலுக்காவே என்றார் தருமபுரி மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் டிஎன்வி எஸ். செந்தில்குமார்.
  இது குறித்து,  தருமபுரியில் அவர் செய்தியாளர்களிடம்  செவ்வாய்க்கிழமை கூறியது:  மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் தி.மு.க. சார்பில்,  பா.ம.க. வேட்பாளர் அன்புமணியை எதிர்த்து போட்டியிடுகிறேன். எட்டு வழிச்சாலைத்  திட்டத்தால் தருமபுரி,  சேலம் உள்பட 5  மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இத் திட்டத்தில் தருமபுரி மாவட்டம்,  பள்ளிப்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் கிருஷ்ணமூர்த்தி,  பழனியப்பன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.  நீதிமன்ற உத்தரவில் அன்புமணி பெயர் எங்கேயும் இல்லை.  நீதிமன்றத் தடையை மீறி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எட்டு வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்கிறார். அதேபோல,  நீட் தேர்வு கட்டாயம் என பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. நிலைப்பாடு என்ன என்பதை அன்புமணி தெளிவுப்படுத்த வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு  ஒருமுறை பா.ம.க. நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிட்டு வருகிறது.  இதில் பல்வேறு திட்டப் பணிகளை அறிவிக்கின்றனர். ஆனால், 5 ஆண்டுகளாக  தருமபுரி தொகுதியில் மக்களவை உறுப்பினராக இருந்த அன்புமணி எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தியதாக தெரியவில்லை. இருப்பினும்,  தற்போது நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்துவதாக கூறுகிறார்.  இதனை கடந்த 5 ஆண்டுகளாக ஏன் செயல்படுத்தவில்லை. அதேபோல,  தருமபுரி மக்களவைத் தொகுதியில் பா.ம.க.வினர் 20 ஆண்டுகளாக மக்களவை உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இக் காலகட்டத்தில் இத்தகைய திட்டங்களை செயல்படுத்த அக் கட்சியினர் முன்வரவில்லை. ஏற்கெனவே 2009 - இல் தி.மு.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட  தாமரைச்செல்வன், தருமபுரி - மொரப்பூர் ரயில் பாதை திட்டம்,  ராணுவ ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். ரயில்வே திட்டத்தை  இதுவரை செயல்படுத்தாமல், தேர்தல் நேரத்தில்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டத்தை கொண்டுவந்திருப்பது அரசியலுக்காக  மட்டுமேயாகும். இத் திட்டத்தில் ஒப்பந்தம் விடப்படவில்லை. மாநில  அரசின் ஒப்புதல் பெறவில்லை. நிலம் கையகப்படுத்தப்படவில்லை. எனவே, தருமபுரி - மொரப்பூர் ரயில்பாதைத்  திட்டம்,  காவிரி உபரி நீரை ஏரிகளுக்கு கொண்டுவருவது உள்ளிட்ட திட்டங்களை நான் நிச்சயமாக செயல்படுத்துவேன் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai