மிஸ் கூவாகமாக தருமபுரி நபீஸா தேர்வு

விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில், தருமபுரியைச் சேர்ந்த நபீஸா மிஸ் கூவாகம்-2019' பட்டத்தை வென்றார்.


விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில், தருமபுரியைச் சேர்ந்த நபீஸா மிஸ் கூவாகம்-2019' பட்டத்தை வென்றார்.
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, மிஸ் கூவாகம்-2019 என்ற திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.  தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் சார்பில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திருமால் தொடக்கி வைத்தார். விழாவில், திருநங்கைகளின் கலாசார நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 தொடர்ந்து,  மிஸ்கூவாகம்-2019 தேர்வு நடைபெற்றது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 50 திருநங்கைகள் பங்கேற்று  நடை,  உடை,  பாவனை,  நடனம் போன்றவற்றில் தங்கள் திறனை வெளிப்படுத்தினர். இரு சுற்றுகளில் மொத்தம் 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.  நிகழ்ச்சிகளுக்கு இடையே,  மாதிரி தேர்தல் வாக்குப் பதிவு,  சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏராளமான திருநங்கைகள் கலந்துகொண்டனர்.
இதையடுத்து, இறுதிச்சுற்று, விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் இரவு நடைபெற்றது.  இதில், 15 பேர் பங்கேற்று பல்வேறு திறன்களை வெளிப்படுத்தினர். பொது அறிவு கேள்விகள் கேட்கப்பட்டன.  இதையடுத்து, 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 
நிறைவாக,  தருமபுரியைச் சேர்ந்த நபீஸா மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டார். கோவை மடோனா இரண்டாம் இடத்தையும்,  ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த ருத்ரா மூன்றாம் இடத்தையும் பெற்றார். இவர்களுக்கு,  கிரீடம் சூட்டி மிஸ் கூவாகம் பட்டம் வழங்கப்பட்டது.
நபீஸா பேட்டி: மிஸ் கூவாகமாக தேர்வான தருமபுரி நபீஸா கூறியதாவது: மிஸ் கூவாகமாக தேர்வானது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் சென்னை அடையாறு அரசு கலைக் கல்லூரியில் பரதநாட்டியம் இரண்டாம் ஆண்டு பயில்கிறேன். தேர்தலுக்குப் பிறகு மத்தியில் அமையும் அரசு திருநங்கைகளின் கல்வி,  வேலைவாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார்.
இரண்டாமிடம் பெற்ற கோவை மடோனா கூறுகையில், சென்னையில் தங்கி பயோ டெக்னாலஜி படித்து வருகிறேன். தாய்லாந்தில் நடைபெறும் கலாசார விழாவில் பங்கேற்க வேண்டும் என்பது எனது ஆசை என்றார்.
மூன்றாமிடம் பெற்ற பவானி ருத்ரா கூறுகையில், சென்னையில் தங்கி மாடலிங் செய்து வருகிறேன். என்னால் இயன்ற உதவியை திருநங்கைகளுக்கு செய்வேன் என்றார்.
விழாவில், திரைப்பட நடிகர்கள் ஜெய்ஆகாஷ்,  சுரேஷ், ஆரி, நாட்டுப்புறப் பாடகர்கள் செந்தில்-ராஜலட்சுமி ஆகியோர் பங்கேற்று விருதுகளை வழங்கினர். விழாவில் திருநங்கைகள், பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com