ரத்தம் செலுத்தியதால் கர்ப்பிணிகள் இறக்கவில்லை: விசாரணை அறிக்கையில் தகவல்

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகள் உயிரிழந்ததற்கு ரத்தம் செலுத்தப்பட்டது


தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகள் உயிரிழந்ததற்கு ரத்தம் செலுத்தப்பட்டது காரணம் அல்ல என்று சிறப்புக் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கிருஷ்ணகிரி, தருமபுரி, ஒசூர் ஆகிய பகுதிகளில்  உள்ள அரசு மருத்துவமனைகளில் பரிசோதிக்கப்படாத ரத்தத்தை செலுத்தியதால் கடந்த சில மாதங்களில் மட்டும் 15 கர்ப்பிணிகள் உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, அரசு மருத்துவமனைகளில் பேறு கால மரணங்கள் அலட்சியத்தின் காரணமாக நடைபெற்றிருப்பின், அதற்கு காரணமானவர்களின் மருத்துவப் பதிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் மீது குற்ற வழக்குப் பதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ் அறிவுறுத்தியிருந்தார்.
அதன் அடிப்படையில், அந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ, மருத்துவ சேவைகள் இயக்குநர் டாக்டர் ருக்மணி ஆகியோர் விசாரணை குழுவை அமைத்தனர்.
அதில், குருதியேற்றத் துறை நிபுணர்களும், ஊரக மருத்துவ சேவைகள் துறை கூடுதல் இயக்குநரும் இடம்பெற்றிருந்தனர். தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், கிருஷ்ணகிரி, ஒசூர் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கும் சென்று ரத்த வங்கிகளின் செயல்பாடுகளை அக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
இந் நிலையில் அதுதொடர்பான அறிக்கையை அவர்கள் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் தாக்கல் செய்துள்ளனர். இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ கூறியதாவது: ஆய்வுக் குழுவினர் ரத்த வங்கிகளில் ஆய்வு செய்து அறிக்கை கொடுத்துள்ளனர். கர்ப்பிணிகள் இறப்புக்கும் ரத்தம் செலுத்தப்பட்டதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பது அதன் வாயிலாகத் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமன்றி கர்ப்பிணிகளுக்கு செலுத்தப்பட்ட ரத்தம் முழுமையாக பரிசோதிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள ரத்த வங்கிகள் அனைத்தும் சிறப்பாக செயல்பட்டு வருவது அறிக்கையின் வாயிலாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரத்த வங்கிகளை மேம்படுத்துவது பற்றியும் அறிக்கையில் சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன” என்றார் அவர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com