வரைவு வாக்குச் சாவடிகள் குறித்த கருத்துகளை மே 2-க்குள் தெரிவிக்கலாம்
By DIN | Published On : 26th April 2019 03:02 AM | Last Updated : 26th April 2019 03:02 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டத்தில் வரைவு வாக்குச் சாவடிகள் குறித்த கருத்துகளை வரும் மே 2-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என மாவட்டத் தேர்தல் அலுவலர் சு.மலர்விழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், வட்டார ஊராட்சி உறுப்பினர்கள், சிற்றூராட்சி உறுப்பினர்கள் மற்றும் சிற்றூராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதே போல, தருமபுரி நகர்மன்றத் தலைவர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி தலைவர் மற்றம் பேரூராட்சி உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இத் தேர்தலுக்கான வரைவு வாக்குச் சாவடிகளின் விவரப் பட்டியல் ஏப். 23 அன்று வெளியிடப்பட்டது. இப்பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கிராம ஊராட்சி அலுவலகங்கள் ஆகிய இடங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
தருமபுரி நகர்மன்றத் தலைவர் மற்றும் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வாக்குச் சாவடிகளின் வரைவுப் பட்டியல் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்களோ, தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களோ அல்லது அரசியல் கட்சிகளின் மாவட்டப் பிரதிநிதிகளோ இது தொடர்பாக தங்களது கருத்துகளை அல்லது மறுப்புகளை தெரிவிக்க விரும்பினால், அதனை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடமோ அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகத்திலோ மே 2-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்றார்.